4 வது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியில் இருவர் சதம்! முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழப்புக்கு 480 ரன்கள் குவித்துள்ளது.
அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில், நேற்று தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் நாள் முடிவில் உஸ்மன் க்வாஜா, கேமரூன் க்ரீன் இருவரும் அவுட்டாகமல் களத்தில் இருந்த நிலையில், க்வாஜா சதத்தை பூர்த்தி செய்த நிலையிலும், கேமரூன் க்ரீன் அரைசதத்தை நெருங்கும் நிலையிலும் இருந்தனர்.
இன்று காலை இருவரும் அதே ஃபார்முடன் ஆட்டத்தை துவக்கினர். நேற்றே 170 ரன்னுக்கு 4 விக்கெட்கள் விழுந்த நிலையில், அதன்பின் இந்திய பௌலர்கள் வெகுநேரமாகப் போராடியும், இந்த இருவர் கூட்டணியை பிடிக்கவே முடியவில்லை. அதே சூழ்நிலைதான் இன்று காலையும் நிகழ்ந்தது.
அதைத்தொடர்ந்து, 23 வயது இளம் வீரரான ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார்.
பின்னர் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 378-ஐ எட்டியபோது, கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுத்த நிலையில், ரவிச்சந்திர அஸ்வின் வீசிய சுழலில் ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களத்தில் இறங்கிய அலெக்ஸ் கேரி ரன் எதுவும் எடுக்காமலும், மிட்சல் ஸ்டார்க் 6 ரன்களும் எடுத்த நிலையில், அஸ்வின் பந்தில் அவுட்டாகினர்.
ஒருவழியாக 7 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முனையில் க்வாஜா பொறுமையாக விளையாடி ரன்களைக் குவித்துவர, மறுமுனையில் களமிறங்கிய நாதன் லயன், டாட் மர்பி இருவரும் தங்கள் பங்கிற்கு ரன்களைச் சேர்க்க, இறுதியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பாக ரவிச்சந்திர அஸ்வின் 6 விக்கெட்டும், முஹம்மது ஷமி 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து இந்திய அணி பேட்டிங்கை துவக்கியுள்ளது. 10 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்து விளையாடி வருகின்றனர்.
இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.