பிளேயிங் லெவனில் மாற்றமா!? தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சிஎஸ்கே!
இன்றைய ஆட்டத்தில் மதியம் 3.30 மணிக்கு சென்னை அணியும், லக்னோ அணியும் மோதவிருக்கின்றன.
ஐபிஎல் 16வது சீசன் தொடரின் 45வது போட்டியில் இன்று சென்னை அணியும் லக்னோ அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியைப் பொறுத்தவரை இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கிய போட்டியாகவே பார்க்கப்படுகிறது. மும்பை மற்றும் ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அணிகள் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
அந்தவகையில், புள்ளிப்பட்டியலில், 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் குஜராத் அணி இருக்கும் நிலையில், அடுத்த 5 இடங்களில் 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 5 அணிகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.
அதன்படி, லக்னோ அணி 3வது இடத்திலும், சென்னை அணி தற்போது 4வது இடத்திலும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மே 1 அன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி லக்னோ அணியை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேறி 5ம் இடத்தைப் பிடித்துள்ளது.
அந்தவகையில், கடைசி போட்டியில் லக்னோ அணி தோல்வியைத் தழுவியதோடு மட்டுமல்லாமல், அந்த போட்டி முடிவில் பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கும், கம்பீருக்கும் இடையே நடந்த பிரச்னையினாலும், சற்று மனஉளைச்சலில் இருக்கும் லக்னோ அணியும், அதிலிருந்து மீண்டு இந்த போட்டியில் வெற்றி பெற போராடும்.
அதேபோல் தொடர்ந்து 2 முறை சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்திற்குள் நிலைத்து நிற்க முடியும். இல்லையெனில் அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளைப் பொறுத்து சென்னை அணி வெளியேறவும் கூடுதல் வாய்ப்புள்ளது.
வழக்கம்போல் ருதுராஜ், கான்வே என பேட்டிங் வரிசையில் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பவுலிங்கில் சற்று சறுக்கலும் உள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மஹீஷ் தீக்சனாவின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சற்று சொதப்பல் நடந்து வருவதால், இவருக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னரை பயன்படுத்த சிஎஸ்கே யோசிக்கவும் செய்யலாம்.
அதேபோல் துஷார் தேஷ்பாண்டே தற்போது 9 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை எடுத்து, இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருந்தாலும், அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். அதனால் இன்றைய ஆட்டம் சற்று எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது.
சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் லெவன் :
1. ருதுராஜ் கெய்க்வாட், 2. டெவன் கான்வே, 3. மோயின் அலி, 4. ரஹானே, 5. சிவம் துபே, 6. ஜடேஜா, 7. ராயுடு, 8. தோனி, 9. தீக்சனா / மிட்செல் சாண்ட்னர், 10. தேஷ் பாண்டே , 11. ஆகாஷ் சிங்