ஐந்தாவது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283, ஹாரி புரூக் அபாரம்!

ஐந்தாவது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283, ஹாரி புரூக் அபாரம்!

ஷஸ் கோப்பைக்கான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

உஸ்மான் க்வாஜா 26 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சாக்னே 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேவிட் வார்னர் 24 ரன்கள் எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்துவீச்சில் கிராவ்லேயிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் ஜெயித்து, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். எனினும் மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹாஸில்வுட் ஆகியோரின் பந்துவீச்சு எந்த பலனையும் கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லே மற்றும் பென் டக்கெட் இருவரும் நம்பிக்கையுடன் ஆடினர்.

முதல் பந்தை பென் டக்கெட் சரியாக அடித்து விளையாடாமல் அது ஸ்லிப் திசையில் சென்றது. ஆனால், டேவிட் வார்னர் அதை காட்ச் பிடிக்க தவறினார். இதனால் டக்கெட் அவுட்டாகாமல் தப்பினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து 62 ரன்கள் எடுத்தனர். பென் டக்கெட் 41 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் கேரியிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து கிராவ்லே 22 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்மித்திடம் காட்ச் கொடுத்து அவுட்டானார், ஜோ ரூட் 5 ரன்களில் ஹாஸில்வுட் வீசிய பந்தில் அவுட்டானார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

எனினும் ஹாரி புரூக், தொடக்கத்தில் தத்தளித்தாலும் பின்னர் சுதாரித்து ஆடி 91 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். அவர் மொயீன் அலியுடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி 34 ரன்கள் எடுத்திருந்தபோது டாட் மர்பி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்து கேப்டன், ஸ்டார்க் பந்துவீச்சில் சாய்ந்தார். ஜானி பாரிஸ்டோவ் நான்கு ரன் எடுத்திருந்தபோது ஹாஸில்வுட் வீசிய பந்தில் அவுட்டானார். ஹாரி புரூக் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் செகண்ட் ஸ்லிப்பில் ஸ்டீவன் ஸ்மித்திடம் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் இருவரும் நின்று ஆடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும் மர்பியின் பந்து வீச்சில் மார்க் வுட் 28 ரன்களில் அவுட்டானார். வோக்ஸ் கடுமையாக போராடிய போதிலும் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளையும், ஹாஸில்வுட், மர்பி இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், மார்ஷ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் பீல்டிங்கில் சொதப்பினாலும் பின்னர் பொறுப்புகளை உணர்ந்து விளையாடி இங்கிலாந்து அணியை 283 ரன்களுக்கு வீழ்த்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com