ஆசிய ஹாக்கி: இந்தியா-ஜப்பான் ஆட்டம் டிரா!

ஆசிய ஹாக்கி: இந்தியா-ஜப்பான்
ஆசிய ஹாக்கி: இந்தியா-ஜப்பான்

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணியினர் வெற்றிபெற வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அதை கோட்டைவிட்டனர்.

ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு மொத்தம் 16 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்ற முடிந்தது. முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா, சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் போட்டியில் கொரியாவிடம் ஜப்பான் தோல்விகண்டது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. ஏறக்குறைய 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைத்தது. எனினும் ஜப்பான் அணியின் முன்னிலை ஆட்டக்காரர்கள் அரண்போல் நின்று இந்தியாவின் கோல் அடிக்கும் முயற்சியை தகர்த்துவிட்டனர். இந்தியா ஆக்ரோஷத்துடன் ஆடியும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஜப்பானுக்கும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை கோலாக மாற்ற முடியவில்லை.

இடைவேளைக்கு முன் இரண்டாவது கட்ட ஆட்டத்தில் ஜப்பானின் கென் நகாயோஷி ஒரு கோல் போட்டு கணக்கை தொடங்கினார். அதாவது இந்த முறை தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜப்பான் சரியாக பயன்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் பாதுகாப்பு அரணை தகர்த்து கோல் போட இந்தியா பலமுறை முயன்றபோதும் அது வெற்றிபெறவில்லை. இடைவேளையின்போது ஜப்பான் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். இதையடுத்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டத்தில் தீவிரம் காட்டின. ஆனாலும் ஜப்பான் அணி தனது வலுவான பாதுகாப்பு மூலம் இந்திய அணி கோல் போடாமல் பார்த்துக் கொண்டது.

இறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி ஆடியது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஆட்டம் டிராவில் முடிந்ததால் ஜப்பானுக்குத்தான் லாபம். ஏனெனில் அது புள்ளிகளுடன் கணக்கை தொடங்கியுள்ளது. இந்திய அணி பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இழந்ததால் ஆட்டம் டிராவாகி அதிக புள்ளிகள் பெறமுடியாமல் அட்டவணையில் மூன்றாவது இடத்திலேயே நிற்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com