ஆசிய போட்டி: குண்டு எறிதலில் தங்கத்தை தக்கவைத்தார் தாஜிந்தர் பால் சிங்!

தாஜிந்தர் பால் சிங்
தாஜிந்தர் பால் சிங்

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 3-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 24 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா 15 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தற்போதைய சாம்பியனான தாஜிந்தர் பால் சிங் தூர், இரண்டாவது முயற்சியில் 20.23 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்தார். அப்போது வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதால் இதர முயற்சிகளை கைவிட்டு வெளியேறினார். எனினும் அந்த பிரிவில் அதுவே அவருக்கு தங்கம் தேடித்தந்தது. ஈரானின் சபேரி மெஹதி (19.98 மீட்டர்), கஜகஸ்தானின் இவான் இவோனோவ் (19.87 மீட்டர்) முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். இந்த வெற்றி மூலம் தாஜிந்தர் பால் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பதக்கம் வென்றபின் பேசிய தாஜிந்தர்பால் தனக்கு ஏற்பட்டுள்ள காயம் சாதாரணமானதே என்றும் விரைவில் குணமடைவேன் என்றும் தெரிவித்தார்.மகளிருக்கான 3,000 மீட்ட்ர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பாருல் செளத்ரி 9 நிமிடங்கள் 38.76 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். சீனாவின் ஷுவாங்ஷுவாங் (9 நிமிடங்கள் 44.54 விநாடிகள்), ஜப்பானின் யோஷிமுரா ரெய்மி (9 நிமிடங்கள் 48.48 விநாடிகள்) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

இதற்கு முன் சுதா சிங் (2013, 2017), லலிதா பாபர் (2015) ஆகியோர் இப்பிரிவில் தங்கம் வென்றுள்ளனர். பாருல் செளத்ரி 2019 ஆம் ஆண்டு 5,000 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஷாய்லி சிங் 6.54 மீட்டர் தாண்டி 2-வது இடத்தை பிடித்தார். சர்வதேச அளவில் இது அவருக்கு முதல் பதக்கமாகும். ஜப்பானின் கமிரே ஹடா (6.97 மீ.) தங்கப்பதக்கமும், சீனாவின் ஜோங் ஜியாவெய் (6.46 மீ.) வெண்கலமும் வென்றனர். இதே பிரிவில் மற்றொரு இந்தியரான அன்சி சோஜன் 6.41 மீ. தாண்டி நான்காவது இடத்தை பிடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com