ஆசிய கிரிக்கெட் போட்டி: இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி!

ஆசிய கிரிக்கெட் கோப்பை
ஆசிய கிரிக்கெட் கோப்பை

சிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிகெட் ஆடவர் மற்றும் மகளிர் அணி நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்ஜு என்னுமிடத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. டி20 இன்டர்நேஷனல் அந்தஸ்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியிலிருந்து 26 வரையிலும், ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரையிலும் நடைபெறும். ஆடவர் அணியில் 18 அணிகளும் மகளிர் அணியில் 14 அணிகளும் பங்கேற்கின்றன.

ஹாங்ஜுவில் உள்ள ஜெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும்.

இந்திய மகளிர் அணி செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் காலியிறுதியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றால் அந்த போட்டி செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும். தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகள் செப்டம்பர் 26 இல் நடைபெறும்.

வங்கதேசத்துடன் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முறைதவறி நடந்து கொண்டதால் அவர் இரண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி, ஆசியப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அதில் ஹர்மன்ப்ரீத் கலந்துகொள்வார்.

ஆசிய போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையேற்பார். இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். (அக்டோபர் 5 காலிறுதி, 6-ல் அரையிறுதி மற்றும் 7 இல் இறுதிப்போட்டி.)

இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி விஷ்ணோய், அவேஷ்கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம்பெறுவர். பிரப்ஷிம்ரன் சிங் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருப்பார். யாஷ் தாகுர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் பதிலி ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.

மகளிர் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக இருப்பார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டன். ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, டைடஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, உமா சேத்ரி மற்றும் அனுஷா பாரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்லீன் தியோல், காஷ்வி கெளதம், ஸ்நேகா ரானா, சைகா இஷாக் மற்றும் பூஜா வஸ்த்ராகர் பதில ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிகளை போட்டிக்கு அனுப்பவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com