சச்சின் பிறந்தநாளை கௌரவப்படுத்திய ஆஸ்திரேலியா!
நேற்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல வீரர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் அவரை பிரம்மாண்டமான முறையில் கௌரவப்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் மைதானங்களில் சிட்னி கிரிக்கெட் மைதானம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் போட்டியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டை நெருங்கும் காலகட்டத்தில் உள்ளது. இந்நிலையில், மிகவும் பழமைவாய்ந்த மற்றும் மிகப்பிரபலமான மைதானமான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே 1882ம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரை காலகட்டத்திற்கேற்ப அந்த மைதானமும் பொலிவுபெற்று, இன்று மிகப்பிரபலமான மைதானமாகத் திகழ்கிறது.
அன்று முதல் இன்று வரை, பல்வேறு பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்த மைதானத்தில் விளையாடியுள்ளனர். அந்தவகையில் மிகவும் பிரசித்தி பெற்ற மைதானமான இங்கு, மைதானத்தில் வீரர்கள் வருவதற்கு நிறைய கதவுகள் இருக்கின்றன. இதில் ஒரு கதவிற்கு ஏற்கெனவே மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சச்சினின் 50வது பிறந்தநாளான நேற்று, இன்னொரு கதவுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா என இருவரின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது.
சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சிட்னி மைதானத்தில் மட்டும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 785 ரன்களைக் குவித்துள்ளார். இங்கு அவரது அதிக பட்ச ஸ்கோர் 241 ரன்கள் ஆகும். அதேபோல் பிரையன் லாரா இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சிட்னி மைதானத்தில் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 384 ரன்களைக் குவித்துள்ளார். இங்கு அவரது அதிக பட்ச ஸ்கோர் 277 ரன்கள் ஆகும்.
இந்த ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது செய்துள்ள இந்த விஷயத்திற்கு, சச்சினும் லாராவும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு மைதானத்தில் இந்தியர்கள் பெயரை வைப்பதும் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.