பயிற்சியாளரை வெளியேற்றினார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து!

பயிற்சியாளரை வெளியேற்றினார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, தனது தென்கொரிய பயிற்சியாளர் பார்க் டா ஸாங்கை நீக்கிவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவர் இவர். எனினும் சிந்துவின் சமீபத்திய தோல்விகளுக்கு அவரே காரணம் என்பதால் அவரை பயிற்சியாளர் பதவியிலிருந்து சிந்து நீக்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

தென்கொரிய பயிற்சியாளர் பார்க் டே ஸாங்கும் இந்த தகவலை உறுதிசெய்துள்ளார். சிந்துவின் தொடர் தோல்விகளுக்கு தானே காரணம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் கூறியுள்ளதாவது: “ சமீபத்திய தொடர் தோல்விகளால் புதிய பயிற்சியாளரை நியமிக்கப்போவதாக பி.வி.சிந்து என்னிடம் கூறினார். இந்த சமயத்தில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். சமீபகாலமாக அவர் சரியாக விளையாடவில்லை. இதற்கு நானே முழு காரணம்.

நான் அடுத்த ஒலிம்பிக் போட்டி வரையில் அவருக்கு பயிற்சியாளராக இருக்க விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற அவர், மேலும் பதக்கங்கள் வெல்லவும் வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துகிறேன். நான் அவரை விட்டு தொலைவில் சென்றுவிட்டாலும் அவர் நன்றாக விளையாட வாழ்த்துகிறேன். அவரது சிறப்பான ஆட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

மாற்றத்தை விரும்பியதால், புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்த்தாகவும் அவர் என்னிடம் கூறினார். அவரது முடிவை மதித்து நடக்க நான் விரும்பினேன். அடுத்த ஒலிம்பிக் போட்டிவரை அவருக்கு பயிற்சியாளராக இருக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். எங்கிருந்தாலும் அவருக்கு எனது ஆதரவு உண்டு” என்று பார்க் தெரிவித்துள்ளார்.

பார்க் பயிற்சியாளராக இருந்தபோதுதான் ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். 2022 இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றதை யாரும் மறக்க முடியாது.

சிந்துவுடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அவருக்கு பயிற்சி அளித்த எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும்

நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பார்க் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது பி.வி.சிந்து புதிய பயிற்சியாளரைத் தேடி வருகிறார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கம் வென்றபோது பயிற்சியாளராக இருந்தவர் புல்லேல கோபிசந்த். அதன் அவருக்கு மாற்றாக பின் கிம் ஜி ஹியூன் என்பவர் பயிற்சியாளராக சேர்ந்தார். எனினும் சிந்துவுக்கும் அவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததால் அவர் வெகுநாள் நீடிக்கவில்லை. கொரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், “பி.வி.சிந்து இதயமே இல்லாதவர். நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவர் என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை. பயிற்சியிலேயே அவர் குறியாக இருந்தார்” என குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இந்த புகாரை சிந்துவின் தந்தை பி.வி.ரமணா மறுத்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com