கோலி சதம் அடித்தும், சுப்மன் கில் சதத்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு அணி!
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதிய நிலையில், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவை தகர்த்தெறிந்தது.
ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டியின் கடைசி ஆட்டத்தில் வாழ்வா சாவா என்ற நிலையில், பெங்களூரு அணி குஜராத் அணியுடன் மோதியது. டாஸை வென்ற குஜராத் அணியினர் பவுலிங்கை தேர்வு செய்தனர்.
நேற்று மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விராட் கோலி, ஃபாப் டூ ப்ளஸிஸ் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே இருவரும் அடித்து ஆட, 7 ஓவரில் பெங்களூரு அணி 67 ரன்களைக் குவித்தது. இதையடுத்து, 8வது ஓவரை நூர் அஹ்மது வீச டூ ப்ளஸிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் டிவாட்டியாவிடம் கேட்க் கொடுத்து அவுட்டானார்.
ஒரு முனையில் கோலி, தனது அதிரடி ஆட்டத்தால் பவுண்டரிகளாக விளாச, மறுமுனையில் களமிறங்கிய மேக்ஸ்வெல், லாம்ரர், இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய பிரேஸ்வெல் சற்று அதிரடியை வெளிப்படுத்தி 5 பவுண்டரி உட்பட 26 ரன்களையும், அனுஜ் ரவத் 23 ரன்களையும் குவித்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், கோலி மறுமுனையில் அவுட்டாகாமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 101 ரன்களை எடுத்து அவுட்டாகாமல், இந்த சீசனில் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கிய நிலையில், துவக்க வீரராக களமிறங்கிய சாஹா 12 ரன்களில் அவுட்டானாலும், சுப்மன் கில், விஜய் சங்கர் இருவரும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விஜய் சங்கர் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 53 ரன்களைக் குவித்தார். சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட கடைசி வரை அவுட்டாகமல், 104 ரன்களை எடுத்து, இந்த ஐபிஎல்-லில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் குஜராத் அணி 19.1 ஓவரிலேயே 198 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்ததன் மூலம் பெங்களூரு அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.