காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி; 4 தங்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி!

ஜெயமாருதி
ஜெயமாருதி

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதிக்கு, சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாருதி (17), வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம், காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ல் தொடங்கி, டிசம்பர் மாதம் 4-ம் தேதி வரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றார்.

அங்கு நடைபெற்ற போட்டியில் 74-கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253-கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார்.

மேலும் பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

அந்தவகையில் காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்று நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய ஜெய மாருதிக்கு சீவூர் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com