முடிவுக்கு வந்த சூப்பர் 12 லீக் போட்டி: அரையிறுதியில் மோதப்போவது எந்தெந்த அணிகள்?

முடிவுக்கு வந்த சூப்பர் 12 லீக் போட்டி: அரையிறுதியில் மோதப்போவது எந்தெந்த அணிகள்?

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 லீக் போட்டிகள் நேற்று நடந்த இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளன.

குரூப் ஏ, குரூப் பி பிரிவுகளாக 12 அணிகள் மோதிய நிலையில் புள்ளிகள் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன.

குரூப் ஏ பிரிவைப் பொறுத்தவரை, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இந்த 3 அணிகளுமே 5 போட்டிகளில் விளையாடி தலா 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று இருந்தது. இருந்தாலும், ரன் ரேட் வைத்துப் பார்க்கும்போது, புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி +2.113 ரன் ரேட்களுடன் முதலிடத்தையும், +0.473 ரன் ரேட்களுடன் இங்கிலாந்து அணி 2வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

குரூப் பி பிரிவை பொறுத்தவரை இந்திய அணி +1.319 ரன் ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா 2வது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியைத் தழுதியதால் பாகிஸ்தான் 1.1028 ரன்ரேட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது.

இதன்படி அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், குரூப் ஏ- வில் முதலிடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து அணியும், குரூப் பி -ல் 2வது இடத்தைப் பிடித்துள்ள பாகிஸ்தான் அணியும் மோதும். அதே போல குரூப் ஏ 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும், குரூப் பி முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் மோதும்.

அரையிறுதிப் போட்டியின் முதல் போட்டியான நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நவம்பர் 9 அன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறும். இந்தியா - இங்கிலாந்திற்கிடையேயான அரையிறுதிப்போட்டி நவம்பர் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்டிலும் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com