
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமஸ்கிருதத்தை மேம்படுத்தும் வகையில் வேத பண்டிதர்களுக்காக நான்கு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
மகரிஷி மகேஷ் யோகியின் பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணி வீர்ர்களுக்கான உடை என்ன தெரியுமா? வேஷ்டியும், குர்தாவும்தான்!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அங்குர் மைதானத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு மகரிஷி மகேஷ் யோகி கோப்பை என பெயர் வைத்துள்ளனர். வேத நெறிமுறைகள்படி சடங்குகளை நடத்திவைக்கும் வேத பண்டிதர்கள்தான் விளையாட்டு வீரர்கள்.
போட்டியில் பங்கேற்கும் வீர்ர்கள் சம்ஸ்கிருதத்தில்தான் பேச வேண்டும். நேர்முக வர்ணனையும் சமஸ்கிருதத்தில்தான். போட்டிக்கான நடுவரும் (அம்பயரும்) சமஸ்கிருத மொழியில்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
இந்த வேதிக் கிரிக்கெட் போட்டி மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறதாம். போட்டியில் வெற்றிபெறும் அணிக்கும், மட்டை வீச்சாளர்கள், பந்து வீச்சாளர்களுக்கு வழக்கமான பரிசுகளுடன், வேத புத்தகங்கள் மற்றும் 100 ஆண்டு பஞ்சாங்கமும் வழங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க பல்வேறு வேத, ஆகமத்தை கடைப்பிடிக்கும் அமைப்புகள் ஆர்வம் காட்டுவதாக போட்டியை நடத்துபவர்கள் கூறுகின்றனர்.