கொல்கத்தா அணிக்கு எதிராக சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே அணி!

கொல்கத்தா அணிக்கு எதிராக சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே அணி!

பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. அளவில் சிறிதான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்யப் பணித்தது.

வழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ருதுராஜ்  மற்றும் கான்வே இணை ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. சென்னை அணியின் ஸ்கோர் 7.3 ஓவர்களில் 73 ரன் என இருந்தபோது  ருதுராஜ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விளையாடிய கான்வே 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து ரஹானேவும், சிவம் துபேவும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை கொல்கத்தா பௌலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. தொடர்ந்து பௌண்டரிகளும் சிக்சர்களுமாக அடித்த இந்த ஜோடி மட்டும் பத்து சிக்சர்களை விளாசியது. இதனால் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்களும், சிவம் துபே 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். தொடர்ந்து வந்த ஜடேஜாவும் தனது பங்குக்கு 2 சிக்சர்களை பறக்க விட, 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 235 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தது. இதுவே இந்த சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்கோடு அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஆட வந்த வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களுடனும், நிதிஷ் ராணா 27 ரன்களுடனும் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 8.2 ஓவர்களில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஜேசன் ராய் திடீரென்று சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்யத் தொடங்கினர். மைதானத்தில் சிக்சர், பவுண்டரி என பந்து பறந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 19 பந்துகளில் ஜேசன் ராய் ஐம்பது ரன்களைக் கடந்தார். அவர் 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீக்சனா பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஜேசன் ராயைத் தொடர்ந்து ரிங்கு சிங்கை தவிர, வேறு யாரும் பெரிதாக விளையாடவில்லை. ரஸல் 9 ரன்கள், டேவிட் வீஸ் 1 ரன், உமேஷ் 4 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு, புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பெற்றது. ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com