ஐ.பி.எல். போட்டிக்கு தயாராகிறார் தோனி!

ஐ.பி.எல். போட்டிக்கு தயாராகிறார் தோனி!
Published on

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இப்போதிலிருந்தே களத்தில் விளையாடத் தயாராகி வருகிறார்.

ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் தாம் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் அவர் அதற்கான பயிற்சி விளையாட்டை தொடங்கிவிட்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய பின்னர் தோனி தமது வழக்கமான ஆட்டத்தை ஆடுவதில்லை.

இந்நிலையில் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பந்தை எதிர்கொண்டு மட்டையால் அடிக்கும் விடியோவை ரசிகர் ஒருவர் விடியோவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பந்தை தூக்கி அடித்து விளையாடுவதில் வல்லவரான தோனி, வலைப்பயிற்சியிலும் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிதான் அவர் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து தோனி விளையாடியபோது, இதுதான் நீங்கள் பங்கேற்கும் கடைசி போட்டியாக இருக்குமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு, சர்வதேச போட்டியிலிருந்து நான் விலகி விட்டாலும், அடுத்த ஆண்டும் (2023) நான் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதால் இந்த போட்டியுடன் அவர் ஓய்வுபெறுவார் எனத் தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஒரு சில போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் கோவிட் இரண்டாவது அலை காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. மீதி ஆட்டங்கள் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்து முடிந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் என்ற முறையில் தோனி நான்கு முறை ஐ.பி.எல். போட்டிகளை வென்றுள்ளார். இந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை வெல்லும் முனைப்பில் அவர் இருக்கிறார். தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தலைமை ஏற்கலாம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com