ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்த இரண்டு ஜாம்பவான்களின் மேட்சைப் பார்த்த ஒரே நபர் யார் தெரியுமா?
1956 ஆம் வருடம் இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர் ஒரு இன்னிங்சில் 10 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை எடுத்தார். பலரு நேரில் கண்டு மகிழ்ந்தனர். இது நிகழ்ந்தது, இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் (Old Trafford).
பின்னர், 1999 ஆம் வருடம் நியூ டெல்லி மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகள் ஒரு இன்னிங்சில் எடுத்து அசத்தினார். இந்த மேட்சையும் பலரும் நேரில் கண்டு களித்தனர். இது நிகழ்ந்தது, அன்றைய பிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்.

இந்நிலையில், இந்த இரண்டு அறிய நிகழ்ச்சிகளையும் நேரில் பார்த்த ஒரே ஒரு நபர் ரிச்சர்ட் ஸ்டோக்ஸ் (Richard Stokes) என்பவர்தான். தான் சிறுவனாக இருந்தபோது ஜிம் லேகரின் அந்த மேட்சையும், பின்னர் 43 வருடங்கள் கழித்து அனில் கும்ப்ளேவின் மேட்சையும் பார்த்துள்ளார்.
சமீபத்திய பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அகமதாபாத் மேட்ச் முடிந்தும் , ஆட்டநாயகர்கள் விருதை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இதேபோல் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்துக் கொண்ட இன்னொரு நிகழ்வும் இந்திய மண்ணில் நடந்தேறியுள்ளது. அதைப் பற்றி காண்போம்.
1987 உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. இது (Reliance Trophy) ரிலையன்ஸ் உலக கோப்பை என்றும் அழைக்கப்பட்டது. அப்போது, நியூஸிலாந்து அணிக்கு எதிராக வேகப் பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா (Chetan Sharma) வரிசையாக தனது பவுலிங்கால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டியில் ஹாட் ட்ரிக் எடுத்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையை பெற்றார். அதிலும் மூன்று விக்கெட்டுகளை ஸ்டம்பை கீழே விழச் செய்து எடுத்தது கூடுதல் சிறப்பு.
அதே மேட்சில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் ஒரு நாள் ஆட்டங்களில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒருநாள் போட்டியில் அவர் அடித்ததும் இந்த ஒரே சதம்தான். 88 பந்துகளில் அதிரடியாக ஆடி 103 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெற்றது.

மேற்சொன்ன இந்த இருவரின் அபார திறமைக்காக ஆட்ட முடிவில், ஆட்ட நாயகன் விருதுகள் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
பொதுவாக ஆட்டநாயகன் விருது சிறப்பாக விளையாடி தங்கள் அணி வெற்றிப் பெற பெரிதும் உதவிய பேட்ஸ்மேன் அல்லது பவுலர் அல்லது ஆல் ரவுண்டர் இவர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால் இவர்கள் யாருக்கும் இல்லாமல், சிறந்த பீல்ட்டிங்கின் மூலம் குறிப்பாக கேட்சுகள் பிடித்ததனால் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1985ம் ஆண்டு, ஷார்ஜாவில் (Sharjah) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இம்ரான்கான் அருமையாக பந்து வீசி 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி 125 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த போட்டியில், கபில் தேவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பேட்டிங்கின்போது, நான்காவது டவுனில் களம் இறங்கிய கவஸ்கர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், பீல்டிங்கின்போது, 4 கேட்சுகளைப் பிடித்து இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவினார். எனவே ஆட்டநாயகன் விருது நான்கு கேட்சுகள் பிடித்த ஒரே காரணத்திற்காக சுனில் காவஸ்கருக்கு வழங்கப்பட்டது.
சர் டான் பிராட்மேன் முதல் தர கிரிக்கெட்டில் 11 முறை ஸ்டம்பிங் (stumping) முறையில் அவுட் ஆகியுள்ளார். அவரை ஸ்டெம்பிங் செய்தவர்களில் ஒருவர் இந்திய விக்கெட் கீப்பர் ப்ரபிர் சென் (Prabir Sen) ஆவார்.

இந்திய கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ், தனது ஒருநாள் ஆட்டத்தில் பவுலிங்கில் தனது முதல் பந்து வீச்சிலேயே விக்கெட் எடுத்து ரிக்கார்ட்டை ஏற்படுத்தினார். தான் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் மேற்கு இந்திய வீரர் நீக்ஸோன் மெக்லீன் (Nixon Mclean) விக்கெட்டைதான் வீழ்த்தினார். சடகோபன் ரமேஷ் எடுத்தது அந்த ஒரே ஒரு விக்கெட் மட்டும்தான்.
அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் பாகிஸ்தான் டீமிற்கு எதிரான டெல்லி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்தார். இந்திய அணி வென்றது. இந்த டெஸ்டில் சடகோபன். ரமேஷ் முதல் இன்னிங்சில் 60 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 96 ரன்களும் எடுத்தார்.