
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி 20 போட்டிக்கு சூர்யா குமார் யாதவ் உதவி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு "நமக்கு தானா!", என்று ஆச்சரியத்தில் கேள்வி கேட்டு கொண்டார். இந்த மாதிரி சம்பவங்கள், கிரிக்கெட்டில் புதிது ஒன்றும் இல்லை.
மிக்க அனுபவசாலிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாதவர், டீமின் கேப்டனாக தேர்வு செய்து அயல் நாட்டு சுற்றுப் பயணத்திற்கு தலைமை ஏற்று விளையாடியது பற்றி காண்போம்.
1972 - 73 ல் இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் விளையாடியது. பல அனுபசாலிகள் இருந்தும், கேப்டனாக தேர்ந்து எடுக்க்கப்பட்டவர் டோனி லெவிஸ் (Tony Lewis). முதல் டெஸ்ட் வடேகர் தலைமையில் டெல்லியில் நடைப்பெற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டனுக்கு அதுதான் அறிமுக டெஸ்ட், ஆட்டக்காரராகவும் மற்றும் கேப்டனாகவும்.
அவர் தலைமையில் இங்கிலாந்து அணி வெற்றிக் கொண்டது. தனது டெஸ்ட் ஆட்டத்தை ரன் எதுவும் எடுக்காமல் துவக்கினார். முதல் இன்னிங்சில் ஆடியது 2 பந்துகள் மட்டுமே. பி.எஸ். சந்திரசேகர் வீசிய பந்தில் 0 ரன்னுடன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் பொறுமையுடன் ஆடி 70 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவினார்.
பிறகு கான்பூர் டெஸ்டில் 125 ரன்கள் எடுத்தார். இதுதான் இவரது ஒரே டெஸ்ட் சதம் ஆகும். அந்த முறை விளையாடிய 5 டெஸ்ட் மேட்சுகள் கொண்ட சுற்றுப் பயணத்தில் இந்திய அணி வென்றது.
டோனி லெவிஸ் மொத்தம் ஆடியது 9 டெஸ்ட் மேட்சுகளே.
மேற்கு இந்திய வீரர் காரி சோபர்ஸ் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்து சரித்திரம் படைத்தார். வருடம் 1968. அந்த குறிப்பிட்ட ஓவரை வீசியவர் மால்காம் நாஷ். அந்த டீமின் கேப்டனாக அன்று இருந்த டோனி லெவிஸ், சிறந்த எழுத்தாளராகவும் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்துள்ளார்.
இவரது பெயரில் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர்புடைய இன்னொரு நபர்தான், கிரிக்கெட் ஆட்டம் மழையின் இடையூறால் தடைபட்டால் ஆட்டம் நேரம் குறைக்கப்பட்டு எவ்வளவு ரன்கள், இவ்வளவு ஓவர்களில் எடுக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர். அவர் பெயரும் டோனி லெவிஸ்.
கணிதவியலாளரான டோனி லெவிஸ், டக்வொர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து 1997-ல் உருவாக்கிய இந்த டக்வொர்த் - லெவிஸ் முறைதான் பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது.