டி20: நூலிழையில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி!

டி20: நூலிழையில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தரோபாவில் பிரையன் லாரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற 200வது டி20 போட்டியில் இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி வீரர்களின் தொடக்கமே மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் 6 ரன்களிலும் சுப்மன் கில் 3 ரன்களிலும் அவுட்டானார்கள். இருவருமே மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சமாளிக்க திணறினார்கள். முதல் முறையாக களத்தில் இறங்கிய திலக் வர்மா மட்டும் ஓரளவு நின்று ஆடி 39 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும்.

சூர்யகுமார் யாதவும், திலக் வர்மாவும் மூன்றாவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மெக்காய் வீசிய பந்தில் காட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஆட்டக்காரர்களும் வெகுநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அக்ஸர் படேல் 13 ரன்கள் எடுத்தபோதிலும் அவரால் நீண்டநேரம் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இறுதியாக, அர்ஷ்தீப் சிங் 12 ரன்கள் எடுத்தார். அவர் ஓரளவு நிதானத்துடன் ஆடியபோதிலும், கடைசி ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து இந்திய அணியின் ஆட்டம் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தனர். முகேஷ், அர்ஷ்தீப் சிறப்பாக பந்து வீசியபோதிலும், அது மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மென்களுக்கு எந்த நிர்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.

நான்காவது ஓவரில் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளரை அறிமுகம் செய்தார். ஆனால், அக்ஸர் படேல் வீசிய பந்தை பிராண்டன் கிங் சிக்ஸருக்கு அனுப்பி தமது திறமையை நிரூபித்தார். சாஹல் சிறப்பாக பந்து வீசி மேற்கிந்திய தீவுகள் அணியினரை திணறடித்தார். அவர் வீசிய பந்தை கிலே மையர்ஸ் அடித்து ஆட முற்பட்டபோது எல்பிடபிள்யூவாகி அவுட்டானார்.

லீக் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து விளையாடிய நிக்கோலாஸ் பூரன் நின்று ஆடி 41 ரன்கள் எடுத்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 6 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 54 எடுத்திருந்தது.

ரோவ்மென் போவெல் அதிரடியாக ஆடி மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளை விளாசினார். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியினரால் பெரிதாக ரன்களைக் குவிக்க முடியவில்லை. கடைசி 30 பந்துகளில் அந்த அணியினரால் 42 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்த்து. இந்திய அணியின் சார்பில் பந்துவீச்சாளர்களில் அக்ஸர் படேல், சாஹல் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்திக், குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com