அதிரடியாக ஆடியும், முதல் டெஸ்ட் போட்டியே அவருக்கு கடைசி போட்டியாக மாறியது! அது யார் தெரியுமா?

அதிரடியாக ஆடியும், முதல் டெஸ்ட் போட்டியே அவருக்கு கடைசி போட்டியாக மாறியது! அது யார் தெரியுமா?

கிரிக்கெட் துணுக்குகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி (டிசம்பர் 2022) கராச்சி மைதானத்தில் உலக சாதனை புரிந்தது. பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்சில், முதல் இரண்டு விக்கெட்டுகளை ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்தினர். கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு இரண்டு விக்கெட்டுகளை ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இரண்டு விக்கெட்டுகளும் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ப, விக்கெட் கீப்பர் ஸ்டெம்புகளுக்கு பின்னால் மிக அருகில் இருந்ததால் ஸ்டெம்பிங் முறை சாதகம் ஆயிற்று.

பேட்ஸ்மேன் அப்துல்லா ஷாபிக் 7 ரன்களுக்கு அஜாஸ் படேல் பந்திற்கும், ஷான் மாசூத் 3 ரன்களுக்கு மைக்கேல் பிரஸ்வல் பந்து வீச்சிற்கும் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இருவரையும் நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் டாம் பிளேண்டல் ஸ்டம்பிங் செய்தார்.

இதை விட தரமான சம்பவம் பற்றி பார்ப்போம்.

ப்பொழுதும் வேக பந்து போடுபவர்கள், வெகு தூரத்திலிருந்து தான் வேகமாக ஓடி வந்து பந்தை போடுவார்கள். அதற்கு ஏற்ப ஸ்டெம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்லிப் பீல்டர்கள் பொதுவாக கேட்ச் பிடிக்க ஏதுவாக நிற்பார்கள். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் நடந்தது வேறு. 

1960 ம் வருடம் ஜனவரி மாதம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் டீமிற்கு எதிராக இந்திய அணி அன்றைய மதராஸ் டெஸ்டில் விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விளையாடிய ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் துடிதுடிப்பான ஆட்டக்காரர் ஒருவர் ஆஸ்திரேலியா பவுலிங்கை அதிரடியாக அடித்து விளையாடி அதிக ரன்கள் குவித்தார். அடிக்கடி கிரீஸுக்கு வெளியே தைரியமாக வந்து நின்று பவுண்டரிகள் விளாசினார். அவரது அபாரமான ஆட்டத்தின் வெளிப்பாடால் இந்த மதராஸ் டெஸ்டில் இடம் பிடித்தார்.

இவர் அந்த டெஸ்ட் மேட்சின் முதல் இன்னிங்சில் (அவரதும் முதல் டெஸ்ட்டும் கூட) விளையாட பிட்ச்சிற்கு வந்தார். சிறந்த வேக பந்து வீச்சாளரான ஆலன் டேவிட்சன் மறுமுனையிலிருந்து பந்து வீசினார். நமது புதுமுக ஆட்டக்காரர் சொல்லி வைத்தாற்போல கிரீசுக்கு வெளியே வந்து ஆடினார். இரண்டவது பந்திலும் ரன் ஏதும் இல்லை. மூன்றாவது பந்திற்கும் கிரீஸை விட்டு முன்னேறி அடிக்க முயன்றார்.

அச்சமயம், ஆஸ்திரேலியா ஆட்டக்காரர்கள் திட்டப்படி, ஆலன் டேவிட்சன் பந்து வீச ஓடி வரும் பொழுதே விக்கெட் கீப்பர் வாலி க்ரவுட் முன்னேறி வந்து ஸ்டெம்புகளுக்கு அருகில் நின்று கொண்டார். அப்படி அவர் வந்து நின்றதை மைதானத்தில் எல்லோரும் பார்த்தனர், நமது ஆட்ட வீரரைத் தவிர. பேசி வைத்துக் கொண்ட படி ஆலன் டேவிட்சன் மெதுவாக பந்தை வீச, விக்கெட் கீப்பர் வாலி க்ரவுட் சுலபமாக பேட்ஸ்மனை ஸ்டெம்பிங் முறையில் வீழ்த்தினார்.

அந்த பேட்ஸ்மேன் எடுத்ததோ 0 ரன். இரண்டாவது இன்னிங்சில் 3 ரன்களில் ஆலன் டேவிட்சன் பந்திலேயே அவுட் ஆனார். 

Man Mohan Sood
Man Mohan Sood

அந்த டெஸ்ட் மேட்சே அவருக்கு முதல் மற்றும் கடைசி மேட்சாகவும் மாறியது. அந்த ஆட்டக்காரர் பெயர் மன் மோகன் சூட் (Man Mohan Sood).

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com