உலகக் கோப்பை ஹாக்கி தொடர்; கட்டாக்கில் பிரம்மாண்டமான தொடக்க விழா!

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்; கட்டாக்கில்  பிரம்மாண்டமான தொடக்க விழா!

லகக் கோப்பை ஹாக்கி தொடர் கட்டாக்கில் நாளை (11-01-2023)  பிரம்மாண்டமான தொடக்க விழா நடை பெறவுள்ளது. ஹாக்கி விளையாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 29 வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய நகரங்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இந்த முறை சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலமாகவே அமைந்துள்ளது. இதனால் இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்பில் இந்திய அணியினர் களமிறங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வினில் கிருஷ்ணா கூறியதாவது, கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் ஜனவரி 11ல் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஹாக்கி வீரர்கள், மாநில மற்றும் தேசிய சங்க உறுப்பினர்கள், ஹாக்கி விளையாட்டின் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஹாக்கி தொடரை நடத்துவதற்கான அனைத்துக்கட்ட பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைத்துவிட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

ஹாக்கி உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு வரும் வாரங்களில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு, கலாச்சார, பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்தியாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் மறக்க முடியாத அளவில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனும் ஹாக்கி இந்தியா விளையாட்டு அமைப்பின் தலைவருமான திலிப் திர்கி கூறும்போது, " ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு சிறப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறும் ரூர்கேலா உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாகவும், 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானம் குறுகிய காலத்தில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் இந்தியா வந்தடைந்து விட்டது. மேலும், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டுள்ளன. உலகக் கோப்பை தொடர் நடைபெறும் இரண்டு மைதானங்களிலும் அனைத்து அணிகளும் விளையாடவுள்ளதால், இரண்டு மைதானங்கள் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு இடையே வீரர்கள் பயணிப்பதற்கு ஏற்ப சார்ட்டட் விமானங்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com