பேட்டிங்கில் என் வளர்ச்சிக்கு விராட் கோலியே காரணம்: ஹர்திக் பாண்டியா!

விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா
விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா

டிரினிடாடில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிரடியாக ஆடி இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று தொடரை கைப்பற்றியது. ஹர்திக் பாண்டியா (70), சுபம் கில் (85), இஷான் கிஷன் (77) மற்றும் சஞ்சு சாம்சன் (51) ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மற்றும் முகேஷ்குமார், ஷர்துல் தாகுர் பந்து வீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது .

பின்னர் இந்த போட்டிக்கு கேப்டனாக தலைமைவகித்த ஹர்திக் பாண்டியா கூறியதாவது:  “இன்றைய ஆட்டம் வெறும் சர்வதேச போட்டியாக இல்லாமல் சிறப்புவாய்ந்ததாக இருந்தது. இதுபோன்ற ஆட்டம்தான் இந்திய அணிக்குத் தேவை. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் என்னவாகும் என்பதை உணர்ந்து வீர்ர்கள் பொறுப்புடன் ஆடினார்கள்” என்றார்.

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதுவிஷயத்தில் ராகுல் திராவிட் எடுத்த முடிவு சரியானது.

ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் நிலைமையை சமாளிக்கவல்ல ஆட்டக்கார்ரகள். இந்த நேரத்தில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் ஆட்டக்காரர்களை ஊக்குவித்தது சரியானதுதான். இதன் மூலம் இளம் ஆட்டக்கார்ர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடிந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 52 பந்துகளை சந்தித்து 70 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

“நான் போட்டிக்கு கேப்டனாக இருந்து 70 ரன்கள் எடுத்தது மகிழ்ச்சிதான். பேட்டிங்கில் எனது வளர்ச்சிக்கு காரணம் விராட் கோலி கொடுத்த ஊக்கம்தான். இரண்டு நாட்களுக்கு முன் நான் விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு சில நுணுக்கங்களை அவர் சொல்லிக் கொடுத்தார். நான் கிரீஸில் நின்று ஆடி 50 அல்லது அதற்கு மேலான ரன்களை எடுக்க வேண்டும் என்று கூறினார். நான் ஏற்கெனவே டி20 போட்டிகளில் விளையாடியதால் அவர் சொன்ன வார்த்தைகளை மனதில் கொண்டு விளையாடினேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதுகிறேன். விராட் கோலி, தமது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றார் ஹர்திக் பாண்டியா.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த்து. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது. அந்த அணி 114 ரன்களுக்கு சுருண்டது.

எனினும் இரண்டாவது ஒருநாள்போட்டியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டன. மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் ஸ்கோரை கட்டுப்படுத்தியதை அடுத்து இந்தியா 181 ரன்களில் அவுட்டானது. மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி இந்திய அணியை வென்றது. இதையடுத்து இரண்டு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்றன.

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோப், டாஸ் ஜெயித்தாலும் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்திய அணி களத்தில் இறங்கி சிறப்பாக ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் சிறப்பாக ஆடிய போதிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதையடுத்து 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com