188 ரன்னுக்குள் ஆஸ்திரேலிய அணி சுருண்டுவிழ இவரும் ஒரு காரணம்!

188 ரன்னுக்குள் ஆஸ்திரேலிய அணி சுருண்டுவிழ இவரும் ஒரு காரணம்!

ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளதையடுத்து, இன்று 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி ஆரம்பித்த நிலையில், டாஸை வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் ஆஸ்திரேலிய அணி சார்பாக ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் களத்தில் இறங்கினர். இன்றைய போட்டியைப் பொறுத்தவரை மைதானம் ரன்கள் எடுப்பதற்கு ஏற்ற மைதானமாகவே பார்க்கப்பட்டது. அதனால் பவுண்டரி, சிக்ஸர் என ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுபோல, ஆட்டத்தின் 2வது ஓவரை முகம்மது சிராஜ் வீச, ட்ராவிஸ் ஹெட் 5 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகி ஆவுட்டானார். அடுத்து 2வது விக்கெட்டிற்கு, ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். இந்த சமயம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் ஆட்டம் சற்று விறுவிறுப்பாகவே மாறியது. மிட்செல் மார்ஷ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அருமையான ஆட்டத்தால் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டார். அவரது அதிரடி ஆட்டத்தை நிறுத்த பவுலர்கள் வெகுநேரம் போராடியும் முடியவில்லை.

இதற்கிடையே சற்று ஆறுதலாக, அணியின் ஸ்கோர் 77 ஆக இருந்தபோது, ஸ்டீவ் ஸ்மித் ஹார்திக் பாண்டியா வீசிய பந்தில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும், மார்ஷ் தனது அதிரடி ஆட்டத்தை நிறுத்தாமல் பவுண்டரி, சிக்ஸர் என விளாசிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், 20வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசிய நிலையில், அந்த ஓவரின் 4வது பந்தில் முகம்மது சிராஜிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் அவுட்டானார். 65 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தாலும், அதில் 11 ரன்கள் மட்டுமே அவர் ஓடி எடுத்தது. மீதமுள்ள 70 ரன்களும் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களால் நிறைந்தது.

அதற்குப் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் 188 ரன்னுக்குள் சுருண்டது.

இந்திய அணி சார்பாக முகம்மது ஷமி 3 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், பாண்டியா, குல்தீப் யாதவ் இருவரும் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணியில் கில்லாடி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகியிருந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றாமல் இருந்திருந்தால் ஒருவேளை அவர் அவுட்டாகாமல் விளையாடிக் கொண்டிருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எங்கோ சென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்நிலையில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கை ஆரம்பித்து விளையாடி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com