முதல் தர கிரிக்கெட்டின் துவக்க ஆட்டத்தை இரட்டை சதத்துடன் துவக்கி சாதனை படைத்த இந்தியர்!
1894 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சிட்னி எட்வர்ட் க்ரெகிரி , புகழ் பெற்ற ஆஷஸ் கோப்பைக்கான மேட்சில் இங்கிலாந்து கிரிக்கெட் டீமிற்கு எதிராக டெஸ்ட் மேட்ச் சரித்திரத்தில் 201 ரன்கள் குவித்து, முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சார்பாக டெஸ்ட்டில் முதல் இரட்டை சதம் எடுத்தவர் பாலி உம்ரிகர். 1955ம் ஆண்டு ஹைதராபாதில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அவர் 223 ரன்கள் எடுத்தார்.
1969ல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கான்பூரில், தனது முதல் டெஸ்ட் மேட்சை ஜி ஆர் விஸ்வநாத் (Gundappa Ranganath Viswanath) துவக்கினார். அதில் முதல் இன்னிங்சில் 0 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 137 ரன்களும் எடுத்து, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரன் எடுக்காமலும், 2வது இன்னிங்சில் சதம் எடுத்தவருமான ஒரே ஆட்டக்காரர் ஜி ஆர் விஸ்வநாத் மட்டும்தான்.
மேலும் இவர் ஏற்படுத்திய இன்னொரு ரிக்கார்டு. இவர்தான் முதல் தர கிரிக்கெட்டின் துவக்க ஆட்டத்தை இரட்டை சதத்துடன் துவக்கிய முதல் ஆட்டக்காரரும் ஆவார்.
1968-69 ல் விஜயவாடாவில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் மைசூர் அணிக்காக (தற்போதைய கர்நாடகா) விளையாடி 230 ரன்கள் குவித்து இந்த சாதனையை படைத்தார்.
ஜி ஆர் விஸ்வநாத் மட்டும் தான் தனது அறிமுக டெஸ்ட்டில் சதமும், கூடவே அறிமுக ரஞ்சி கோப்பை மேட்சில் இரட்டை சதமும் எடுத்து அசத்தியவர் ஆவார்.
ஜி ஆர் விஸ்வநாத் எடுத்த 14 செஞ்சுரிகளில் 13 டெஸ்ட்டுகளில் , இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
14 டெஸ்ட் சதங்களும், மொத்தம் 6080 டெஸ்ட் ரன்களும் எடுத்த இவரால் 100 டெஸ்ட்டுகள் ஆட முடியவில்லை. இவர் ஆடிய மொத்த டெஸ்ட் மேட்சுகள் 91 மட்டுமே.
பல முத்துக்களான இன்னிங்ஸ்களை ஆடியதில் இரண்டை இங்கே காணலாம்:
மதராஸ் (இன்றைய சென்னை) சேப்பாக் மைதானத்தில் மேற்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், ஜி ஆர் விஸ்வநாத் அவுட் ஆகாமல் பொறுமையாகவும், சூழ்நிலைக்கேற்ப இவர் விளையாடிய பேட்டிங்கினாலும், 97 ரன்களை எடுத்தார். ஜி ஆர் விஸ்வநாத் லேட் கட், ஸ்கொயர் கட், டிரைவ்ஸ் போன்றவற்றை அட்டகாசமாக, ஆரவாரமின்றி அடித்தார். குறிப்பாக வேக பந்து வீசிய கீய்த் பாயிஸ் தனது பவுலிங்கை முடிக்கும் முன்பே விஸ்வநாத் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ் பந்தை பவுண்டரி கோட்டை தாண்டி குதிக்க வைத்தது. இது 1975ல் நடந்த ஒரு நேர்த்தியான ஆட்டம் என்றே கூறலாம்.
ஜி ஆர் விஸ்வநாத் டெஸ்ட் மேட்சுகளில் அதிக பட்சமாக எடுத்த ரன்கள் 222. 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 374 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் இந்த இரட்டை சதத்தை எடுத்தார். யஷ்பால் சர்மா (140 ரன்கள் ) ஜோடி சேர்ந்து ஆடினார். இங்கிலாந்து அணியின் தலை சிறந்த பவுலர்களான பாப் வில்லிஸ், இயன் போதம், அண்டர் வுட் ஆகியோர் பந்து வீசினர்.
ஜி ஆர் விஸ்வநாத் இந்த இரண்டு ஸ்கோர்களை பெரிதாக மதித்தார். அவருடைய தொலைப்பேசி எண்ணில் இந்த எண்கள் இடம் பெற செய்துள்ளார்.
இதுவரை இரண்டு டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்துள்ள இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.