
இந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் நமது நாட்டிற்காக 40 டெஸ்ட் மேட்சுகளில் விளையாடியுள்ளார். இவர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் போதுதான், தனக்கு கொடுத்த எல்பிடபிள்யு முடிவு தவறானது என்று கேப்டன் சுனில் கவாஸ்கர் மைதானத்திலிருந்து வெளி நடப்பு செய்தார். கூடவே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆடியவரான சேத்தன் சவுகானையும் பெவிலியனுக்கு தன்னோடு அழைத்து சென்றார். ஆனால் நல்லவேளை இந்திய கிரிக்கெட் டீமின் மேனேஜர் வேகமாக வந்து பேசி அந்த நிகழ்வை தவிர்த்தார்.
சேத்தன் சவுஹான் 40 டெஸ்டுகளில் எடுத்த மொத்த ரன்கள் 2084. ஒரு இன்னிங்சில் எடுத்த அதிக பட்ச ரன்கள் 97. டெஸ்டுகளில் 2000 ரன்களுக்கு மேல் குவித்தும் ஒரு செஞ்சுரி கூட எடுக்காதது ஒரு பெரிய குறைதான். சுனில் கவாஸ்கருடன் ஜோடி சேர்ந்து 36 டெஸ்ட் மேட்சுகளில் ஆட்டத்தை துவங்கியுள்ளார். தனது முதல் (1969) மற்றும் கடைசி டெஸ்ட் (1981) நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடியவர். பல டெஸ்ட் மேட்சுகளில் பல பவுண்டரிகளை விளாசிய இவர் அடித்தது ஒரே ஒரு சிக்ஸர் தான். 1947ல் பிறந்த இவர், கிரிக்கெட் ஓய்விற்கு பிறகு அரசியல் களத்திலும் ஈடுபட்ட நிலையில், 2020ல் கொரோனாவினால் பாதிக்கபட்டு 73 வது வயதில் மறைந்தார்.
----------------------
டெஸ்ட் மேட்ச் ஆரம்பிக்கும் முன் காயம் காரணமாக விலகி , விளையாடிய வேறு ஆட்டக்காரர் அசத்திய நிகழ்வுகள் இரண்டு. அந்த இரு நிகழ்வுகளும் குறிப்பிட்ட இரண்டு ஆட்டக்காரர்கள் சம்பந்தப்பட்டவை.
ஜனவரி 1964
அப்போது இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் விளையாட வந்திருந்தது. இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாட வேண்டிய பாரூக் இன்ஜினீருக்கு பதிலாக புத்தி குந்தேரன் களம் இறங்கினார். மைக் ஸ்மித் தலைமையில் வந்த இங்கிலாந்து அணியில் பெரிதாக பேசப்பட்ட 6 அடி 7 அங்குலம் உயரமான டேவிட் லார்ட்டார் என்ற வேக்கப் பந்து வீச்சாளர் பவுலிங்கை ஓபன் செய்தார். குந்தேரன் பந்துகளை நான்கு பக்கமும் அடித்து பவுண்டரிகளை விளாசினார். நாள் முழுவதும் ஆடி, அடுத்த நாள் 192 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதை தவிர அந்த முறை எல்லா டெஸ்டுகளிலும் அவரே இடம் பெற்று மொத்தம் 525 ரன்கள் குவித்தார். டெல்லி டெஸ்டில் 100 ரன்கள் அடித்தார்.
.
1966-67
காரி சோபர்ஸ் தலைமையிலான மேற்கு இந்திய கிரிக்கெட் குழுவை இந்திய அணி எதிர் கொண்டது. கடைசி நேரத்தில் புத்தி குந்தேரனுக்கு பதிலாக விளையாடியவர் பாரூக் இன்ஜினீயர். புகழ்மிகுந்த வேக பந்து வீச்சாளர்கள் ஜோடி வெஸ்லி ஹால் மற்றும் சார்லி கிரிபித் பந்துகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. மதிய உணவு இடைவெளியின் பொழுது இன்ஜினீயர் 96 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் இருந்தார். பிறகு தொடர்ந்து ஆடி சதம் அடித்தார். அந்த மேட்சில் அவர் எடுத்தது 109 ரன்கள்.
இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. புத்தி குந்தேரன் , பாரூக் இன்ஜினீயர் இருவரும் சேர்ந்து சில டெஸ்டுகளில் ஆடியும் உள்ளனர். டெஸ்ட் மேட்சுகளை துவக்கியும் உள்ளனர்.