இந்திய சுழற்பந்து வீச்சில், 263 ரன்னுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா!
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்–கவாஸ்கர் டிராபியின் 2வது டெஸ்ட் போட்டி இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.
டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. டேவிட் வார்னர், உஸ்மான் க்வாஜா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர். முன்னதாக நடந்த முதல் டெஸட்டில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், உஸ்மான் க்வாஜா இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இன்றைய போட்டியில் இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இம்முறையும் டேவிட் வார்னர் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முஹம்மது ஷமியின் பந்தில் அவுட்டானார்.
நிலைமையை உணர்ந்த உஸ்மான் க்வாஜா பொறுப்புடன் விளையாடி 125 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். எனினும் அடுத்து களமிறங்கிய மார்னஸ், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் இவர்களும் குறிப்பிடும்படி தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் மட்டும் சிறப்பாக விளையாடி 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களுக்கு 263 ரன்களுக்குள் சுருண்டது.
இன்றைய போட்டியைப் பொறுத்தவரை, மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது என்றே கூறலாம். இந்திய அணி சார்பாக, முஹம்மது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ரவிந்தர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கி தனது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 9 ஓவர்களுக்கு 21 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், கேஎல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.