ஜெய்ஸ்வால், ரோஹித் சதம், இந்திய அணி அபாரம்!

ஜெய்ஸ்வால், ரோஹித் சதம், இந்திய அணி அபாரம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மற்றும் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெய்ஸ்வாலும் அதிரடியாக ஆடி சதம் எடுத்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோரைவிட இந்தியா கூடுதலாக 162 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.டொமினிகாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜெய்வால் 350 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோஹித் சர்மா 221 பந்துகளை சந்தித்து 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டம் மெதுவாகவே தொடங்கியது. எனினும் உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித், ஜெய்வால் இருவரும் உத்வேகத்துடன் ஆடினர். ஆனாலும் சதம் அடித்த ரோஹித், அலிக் அதாநாஸே பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய சுபம் கில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையிலேயே அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேர்ந்து விளையாடி 201 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு சஞ்சய் பங்கர் மற்றும் வீரேந்திர சேவக் இருவரும் இந்த சாதனையை புரிந்திருந்தனர். ஆனால், ரோஹித், ஜெய்ஸ்வால் கூட்டாக 229 ரன்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்தனர். மேலும் முதல் போட்டியிலேயே சதம் எடுத்த மூன்றாவது இந்திய வீர்ர் என்ற பெருமை பெற்றார் ஜெய்வால். இதற்கு முன்னர் ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா இருவரும் இந்த சாதனையை புரிந்தவர்கள்.

விண்ட்ஸர் பார்க் ஆடுகளம் எதிர்பார்த்த அளவு இல்லை. பந்துவீச்சில் வேகம் இல்லை. இதனால் பேட்ஸ்மென்களும் ரன்கள் அடிக்க முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால், இந்திய வீர்ர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். எனினும் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களின் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டது. தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. ஆட்ட முடிவில் விராட் கோலி 36 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 72 ரன்கள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 162 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com