India vs South Africa
India vs South Africa

இந்திய பௌலிங்கில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா: இந்தியா அபார வெற்றி!

அர்ஷ்தீப் சிங் அசத்தல்
Published on

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்-கேப்டன் பவுமா களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார். அந்த ஓவரில் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றி அர்ஷ்தீப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது. ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த ஐடன் மார்க்ரம். ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசையில் பார்னெல் கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்- கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரை வீசிய ரபாடா ரோகித் சர்மா டக் அவுட் ஆனார்.அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கே.எல் ராகுல் (51) மற்றும் சூர்ய குமார் (50) ஜோடி நிதனமாகவும் அதிரடியாகவும் ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இருவருமே அரை சதம் கடந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

logo
Kalki Online
kalkionline.com