பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1.30 மணியளவில் நடைபெறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் சொதப்பலான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி லெகுவாக வென்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, இந்த மைதானம் இந்திய ஆடுகளங்களைப் போல் செயல்படுவதால் இந்தியாவிற்கு சாதகமாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த மைதானம் பக்கபலமாக அமையும் என்பதால் தலைசிறந்த பௌலர்களும் இங்கிலாந்து அணியில் இருப்பதால் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல் பந்து வீச்சு தங்களுக்கு சாதகமாக வந்தால் அடித்து நொறுக்குவதிலும் இங்கிலாந்து வீரர்கள் சளைத்தவர்கள் இல்லை.

இன்றைய போட்டியில், இந்திய அணியில் சிறு மாற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அக்சர் பட்டேலுக்கு பதில் சாஹல் அணியில் வர வாய்ப்பு இருக்கிறது.

பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இருந்தாலும் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் முக்கிய ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தாலும், இந்த போட்டியில் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சர்வதேச டி20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ள நிலையில் இந்தியா 12 முறையும், இங்கிலாந்து 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலையைப் பொறுத்தவரை மழை குறுக்கிடாது என்று அறியப்படும் நிலையில், இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா ஜெயித்தால், பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும். அப்படி நடைபெற்றால் இறுதிப்போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com