ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!
spotik.in

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டுள்ள நிலையில் இந்தியாவும், மலேசியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி, ஒரு போட்டியில் டிராவுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மலேசியா 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியானான தென்கொரியா ஒருவெற்றி 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 4 வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. ஆனால், ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியம் என்ற நெருக்கடியில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் பாகிஸ்தானுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், தோல்வி அடைந்தால் சீனா-ஜப்பான் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு தெரியவரும். சீனாவிடம் ஜப்பான் தோல்வி அடைந்தால் அது பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். இதேபோல மலேசியா-தென்கொரியா இடையிலான போட்டியில் மலேசியா தென்கொரியாவை வீழ்த்தினாலும் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.

போட்டியின் வரலாற்றை பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் தலா 3 முறை கோப்பை வென்று சமபலத்தில் உள்ளது. ஆனால், நடப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, தோல்விகாணாத ஒரே அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இதுவரை நான்கு ஆட்டங்களில் ஒரேயொரு வெற்றியை மற்றும் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால்தான் அரையிறுக்குள் நுழையலாம் என்ற நிலையில் உள்ளது.

புதன்கிழமை நடைபெறும் போட்டியில் இந்தியாவுக்கே வெற்றிவாய்ப்பு இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் இன்றைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதால் போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

தேவையின்றி அதிகமான பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கொடுக்காமல் விளையாடுவதே முக்கியமான உத்தியாக இருக்கும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியா தனக்கு கிடைக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தந்திரமான அணுகுமுறைகளை கையாண்டு விளையாட வேண்டும்.

பாகிஸ்தான் அறையிறுதிக்குள் நுழைந்து, இந்தியாவும் முதலிடத்தை உறுதி செய்தால் மீண்டும் இரு அணிகளும் மோதும் பரபரப்பான ஆட்டத்தை பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com