இந்திய அணியின் மோசமான ஆட்டம்: ரோஹித் காட்டம்!

இந்திய அணியின் மோசமான ஆட்டம்: ரோஹித் காட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியினர் சரியாக விளையாடவில்லை என்று காட்டத்துடன் கூறினார் அணித் தலைவர் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தை அழகாக ஸ்விங் செய்து, 5 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணி குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார்.

இந்திய மண்ணில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி நான்காவது முறையாக குறைந்த ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்ஆவுட்டானது. மிட்செல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒருநாள் சர்வதேச போட்டியில் அவர் ஒன்பதாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா கூறுகையில், “ இந்திய அணியினரின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. அதில் சந்தேகம் இல்லை. ஒருவரும் தங்கள் திறமையை பயன்படுத்தி ஆடவில்லை. 117 ரன்களில் அவுட்டாகும் ஆடுகளம் இல்லை இது. இந்த ரன்கள் போதுமானதல்ல என்பதும் அனைவருக்கும் தெரியும். எந்தவகையில் பார்த்தாலும் இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை” என்றார்.

“மிட்செல் ஸ்டார்க் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவர் பல ஆண்டுகளாக ஆஸி. அணிக்காக பந்துவீசி வருகிறார். அவர், தனது முழு திறனையும் பயன்படுத்தி பந்து வீசினார். ஆனால், நாம் ஒழுங்காக விளையாடமல் அவரது பந்து வீச்சில் வீழ்ந்துவிட்டோம். எனவே அதை புரிந்துகொண்டு நாம் ஆடவேண்டும். ஆஸி. பந்து வீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக பந்து வீசி இந்தியாவுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தினர்” என்றார் ரோஹித் சர்மா.

வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், பந்தை அழகாக ஸ்விங் செய்து வீசி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை மளமளவென வீழ்த்தி 53 ரன்கள் கொடுத்து முகமது சிராஜ் உள்பட 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான சீன் அப்போட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்திய அணியின் பேட்டிங் உண்மையிலேயே மிக மோசமாக இருந்தது. 4 பேட்ஸ்மென்கள் ரன் ஏதும் எடுக்காமலே அவுட்டாகியுள்ளனர். விராட் கோலி மற்றும் அக்ஸர் படேல் இருவரும் சமாளித்து ஆடி 25 ரன்களுக்கு மேல் எடுத்தனர் என்றார்.

இந்திய அணியினர் ஓரளவு நன்றாக பந்துகளை வீசியபோதிலும் ஆஸ்திரேலிய அணியினர் நின்று ஆடி 11 ஓவர்களிலேயே இலக்கான 118 ரன்களை குவித்து வெற்றிபெற்றனர். தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஆட்டமிழக்காமல் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. தமது அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்திறன் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திருப்தி தெரிவித்துள்ளார். அடுத்த போட்டி, சென்னையில் வரும் புதன்கிழமை 22ம் தேதி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com