IPL 2023 : அசால்ட்டாக பந்தாடிய குஜராத் டைடன்ஸ்!
நேற்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் அணிக்கும், குஜராத் அணிக்கும் நடைபெற்ற நிலையில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் 48வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின.
டாஸை வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் யாருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.
2வது விக்கெட்டுக்குக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மட்டும் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். மற்றபடி வீரர்கள் எல்லோருமே சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததையடுத்து, ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.

அந்த அணியைப் பொறுத்தவரை, சுப்மன் கில் மட்டும் 36 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். விரிதிமன் சாஹா 41 ரன்களும், ஹார்திக் பாண்டியா 39 ரன்களும் எடுக்க குஜராத் அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து, இந்த ஐபிஎல்-லில் தனது 7வது வெற்றியை ருசித்தது.
இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத் அணியின் பந்துவீச்சாளர் ராஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.