IPL 2023 : என்னா அடி... பிராத்வெய்த்துடன் ஒப்பிடப்பட்ட ரிங்கு சிங்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி 17 பந்துகள் மீதமுள்ள நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதேபோல் இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 98 ரன்களைக் குவித்துள்ள நிலையில் நேற்றைய அவரது ஆட்டம் யாரும் எதிர்பார்க்காத அதிரடி ஆட்டமாக அமைந்தது.
நேற்றைய போட்டியில் அவர் 21 பந்துகளை சந்தித்து 48 ரன்களைக் குவித்தார். ஆனால் இந்த ஸ்கோரில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள்தான் ரிங்கு சிங்கை பிராத்வெய்த்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்க்க வைத்தது.
அதாவது, 2016ஆம் ஆண்டு... நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி மோதிய நிலையில், கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளப்பட்டது.

அப்போது, கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அச்சமயம் களத்தில் இருந்த பிராத்வெய்ட் அந்த ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசி யாருமே எதிர்பார்த்திராத வெற்றியை பெற்றுத்தந்தார்.
கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களைப் பார்த்து பிரமித்துப்போனவர்கள், இதைபோல் இனி நடக்க வாய்ப்பு குறைவுதான் என்று எதிர்பார்த்த நிலையில், அதை உடைக்கும்விதமாக ரிங்குசிங் நேற்று சாதனை படைத்தார். நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில், கொல்கத்தா அணி வெற்றிபெற 29 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் ஸ்டிரைக்கராக உமேஷ் யாதவ் நிற்க, முதல் பந்தில் 1 ரன் எடுத்து, ஸ்டிரைக்கை ரிங்கு சிங்கிடம் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து 5 பந்துகளில் 28 ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில், இது கடினமான விஷயம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசி அரங்கத்தையே திரும்பி பார்க்கவைத்து, ரிங்கு சிங் இந்த பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதனால்தான் ரிங்கு சிங்கை பிராத்வெய்த்துடன் பலரும் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.