IPL 2023 : 13 பந்தில் அரைசதம்! சிக்ஸர், பவுண்டரி என ஜெய்ஸ்வால் வெறியாட்டம்!
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால், 13.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
16வது சீசன் ஐபிஎல் தொடரின் 56வது போட்டி, ஈடன் காடர்ன் மைதானத்தில், நேற்று நடைபெற்றது. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளான ஜேசன் ராய், குர்பாஸ் இருவரின் விக்கெட்டையும் எடுத்தார். இதையடுத்து, 4.1 ஓவரிலேயே வெறும் 29 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தவித்தது.
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், நிலைமையை உணர்ந்து சிறப்பாக விளையாடி 57 ரன்களை எடுத்து, அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். மற்ற வீரர்களான நிதிஷ் ராணா, ஆண்ட்ரூ ரஸல், ரிங்கு சிங் என யாரும் பெரிதாக ரன்களை எடுக்காததால், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதையடுத்து ஜாஸ் பட்லர் 3 பந்துகளை சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காத நிலையில், ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து ஜெய்ஸ்வாலுடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். பின்னர்தான் ஆட்டமே துவங்கியது.

ஜெய்ஸ்வால், சாம்சன் இருவருமே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா என பவுலர்கள் இருவரையும் வீழ்த்த எவ்வளவோ போராடியும் அவர்களால் முடியவில்லை.
இருவருமே அசாத்தியமாக விளையாடி பவுண்டரி, சிக்ஸர் என விளாசித்தள்ளினர்.
ஜெய்ஸ்வால் களமிறங்கிய முதல் பந்திலேயே தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார்.
முதல் ஓவரில் 6, 6, 4, 4, 2, 4, 2வது ஓவரில் 4, 6, 3வது ஓவரில் 4, 4, 4 என 13 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.
இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 48 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்களை எடுத்து அசாத்திய வெற்றியை பெற்றது.