IPL 2023 : நேற்றைய போட்டியில், 'தல' தோனி என்ட்ரியும், அதிர்ந்த மைதானமும்!
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தாலும், 7வது விக்கெட்டுக்கு தல தோனி என்ட்ரியானது முதல் கடைசி பந்து வரை மைதானமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.
ஐபிஎல் 16 வது சீசன் போட்டியின் நேற்றைய ஆட்டம் CSK vs RR அணிகளுக்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. டாஸை வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.
இதையடுத்து, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.
இந்நிலையில், 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டேவன் கான்வே சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்தார். அஜிங்யா ரஹானே 19 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 31 ரன்களை எடுத்தார். மற்றபடி துவக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் அவுட்டாக, 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணி தடுமாறி வந்தது.
இந்நிலையில், 15வது ஓவர் முடிவில் ஜடேஜாவுடன் கைகோர்க்க, கேப்டன் தோனி மைதானத்தில் இறங்கினார்.

அதுவரை சிறிய சோகமும், குழப்பமான மன நிலையுமாக போட்டியை பார்த்துவந்த ரசிகர்கள், தோனி மைதானத்தில் என்ட்ரி கொடுத்ததும், அங்கு பார்வையாளர்களாக கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எண்ணற்ற மகிழ்ச்சியுடன் கரகோஷங்களை எழுப்பி மிகுந்த உற்சாகமடைந்தனர்.
வாடியிருந்த முகங்கள் எல்லாம் சற்று தலைதூக்க ஆரம்பித்தன. இருநதும் 16வது ஓவரில் 4 ரன்களும், 17வது ஓவரில் 5 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 17 ஓவர் முடிவில், அணியின் ஸ்கோர் 122ஐ எட்டியது.
இன்னும் 3 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வெற்றிபெற 54 ரன்கள் தேவை என்ற நிலையிலும், மைதானத்தில் ரசிகர்களின் முகத்தில் பதட்டம் குறைந்து, கவனம் முழுக்க தல தோனியின் மீது மாறியது.

18வது ஓவரை ஆடம் சாம்பா வீச, ரசிகர்களின் கரகோஷத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக, அதுவரை பொறுமையாக பந்துகளை சந்தித்துவந்த தோனி, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இப்போது ரசிகர்களின் கரகோஷம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது.
அடுத்து 19வது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீச, வழக்கம்போல ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அவர் பங்குக்கு 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்த நிலையில், சிஎஸ்கே 155 ரன்களை எட்டியது.

வெற்றிபெற 21 ரன்கள் தேவை. மீதமிருப்பது 6 பந்துகள். இப்போதும் மைதானத்தில் கூடியிருந்த அனைத்து ரசிகர்களின் நம்பிக்கையும் தல தோனிதான். மைதானமே அந்த ஓவரில் தோனி இருக்க பயமேன் என்ற நம்பிக்கையோடு ஆட்டத்தை உற்று கவனிக்க ஆரம்பித்தது.
இந்த ஓவரை சந்தீப் ஷர்மா வீசவந்தார். 17வது ஓவருக்குப் பின் நடந்த அதிரடி ரன் குவிப்பால், சந்தீப் ஷர்மாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எப்படியாவது ரன்னைக் கட்டுப்படுத்தி, ஜெயித்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன் முதல் பந்தை வீச, அங்கு எந்த டென்ஷனும் இல்லாமல் எதிரே தல தோனி பேட்டிங் செய்ய ஆரம்பித்தார்.
முதல் பால் போட்ட நிலையில், பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து மறுபடியும் போட அதுவும் வைட். அடுத்து முதல் பால் போடப்பட்ட நிலையில், அது நல்ல அருமையான யார்க்கராக அமைய, அந்த பந்தில் ரன் ஏதும் வரவில்லை.
இன்னும் 5 பந்துகள் மீதமுள்ள நிலையில், 19 ரன்கள் தேவை என்ற நிலையில் தல தோனி, அந்த ஓவரின் 2வது பந்தில் அருமையான சிக்ஸை அடித்து, எதிரணியை சற்று நிலைகுலைய வைத்தார். 4 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், சற்று பதட்டத்துடன் சந்தீப் ஷர்மா பந்து வீச, மறுபடியும் ஒரு சிக்ஸரை அடித்து அரங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார் தோனி.

3 ஓவரில் 54 ரன்கள் தேவை என்ற நிலையை மாற்றி 3 பந்தில் 7 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்த தோனியின் பேட்டிங்கை பார்த்து எதிரணியினர் மிரண்டு போயினர். நெருக்கடி மேல் நெருக்கடி சந்தீப் ஷர்மாவுக்கு. அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த சறுக்கல் நிகழ ஆரம்பித்தது. சந்தீப் ஷர்மா அந்த ஓவரின் 4வது பந்தைப் வீச அது தோனியின் பேட்டில் சரியாகப் படாத நிலையில் அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதையடுத்து 2 பந்தில் 6 ரன்கள் என்ற நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்ய அந்த பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட, கடைசி பந்தை தோனி எதிர்கொண்டார்.
1 பந்தில் 5 ரன்கள் என்ற இக்கட்டான நிலையிலும், பேட்டிங் செய்வது தோனி என்பதால், என்ன நடக்குமோ என்று எதிரணியினர் முகம் அனைத்தும் வாடி வதங்கி காணப்பட்டாலும், அந்த கடைசி பந்து வரையிலும், அனைத்து ரசிகர்களும் தோனியின் மீதே நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராதது நடந்ததுபோல் அந்த பந்திலும் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் நேற்றைய போட்டியைப் போல் ஒரு சிறந்த போட்டியை இந்த ஐபிஎல்லில் பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு கடைசி 3 ஓவர்கள் அமைந்திருந்து. அதிலும் தோனி மீதான நம்பிக்கை என்பது அவரது கடைசி பந்து வரை நீடிக்கிறது என்றால், அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.