IPL 2023 : ஆன்லைனில் ஒரு மணி நேரத்தில் விற்கப்பட்ட பிளே ஆஃப் சுற்று டிக்கெட்டுகள்!
ஐபிஎல் 2023 16வது சீசன் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், இதுவரை குஜராத் அணி மட்டுமே முதல் அணியாக தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 2, 3, 4ம் இடத்தில் முறையே சென்னை அணி, லக்னோ அணி, மும்பை அணி இருந்தாலும், மீதமுள்ள 3 இடங்களைப் பொறுத்தவரை, எந்த அணி வெளியேறும் எந்த அணி புதிதாக உள்ளே நுழையும் என்பது இனி நடக்கவிருக்கும் மீதமுள்ள 6 போட்டிகளைப் பொறுத்தே அமையும்.
லீக் போட்டிகள் முடிந்தபின், வரும் 23 ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
23 ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிஃபயர் மற்றும் 24 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதையடுத்து, இதற்கான டிக்கெட்டுகள், இன்று ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று பகல் 12 மணி முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கியது.
ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு பிரிவுகளாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், விற்பனை துவங்கிய 1 மணி நேரத்திலேயே பிளே ஆஃப் சுற்றுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தன.
இந்த ஐபிஎல்-லில் நாளுக்குநாள் போட்டிகளில் சுவாரசியம் அதிகரித்து வருவதும், பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள் விரைவாக விற்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளது.