IPL 2023 : ஷிகர் தவான், ப்ரப்சிம்ரன் சிங் அதிரடி ஆட்டம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில், ஷிகர் தவான், ப்ரப்சிம்ரன் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது 2வது வெற்றியை பெற்றுள்ளது.
ஹவுகாத்தி பர்ஸபரா மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்ற நிலையில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் சார்பாக ப்ரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் இருவரும் துவக்க வீரர்களாக களத்தில் இறங்கினர். நேற்றைய போட்டி ஆரம்பித்தது முதலே, இரு வீரர்களும் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தை அளித்து வந்தனர்.
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரி, சிக்ஸர் என ரன் மழை பொழிந்த நிலையில், 9.4 வது ஓவரில் அணியின் ஸ்கோர் 90-ஐ எட்டியபோது ப்ரப்சிம்ரன் சிங் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவர் இந்த ரன்கைள வெறும் 30 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உதவியுடன் எடுத்தார்.

மறுமுனையில் ஷிகர் தவானுக்கு ஜோடியாக அடுத்தடுத்து ராஜபக்ஷா, ஷர்மா, ஷிகந்தர் ராசா, ஷாருக் கான், சாம் கரண் இறங்கினாலும், ஷிகர் தவான் தனி ஆளாக நின்று அவரது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
அடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய ஸ்கோரை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், அஸ்வின் களமிறங்கினர்.
இந்நிலையில், அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டாக, அவரைத் தவிர களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைமையை உணர்ந்து சிறப்பாக விளையாடினர். ஜெய்ஸவால் 13, ஜாஸ் பட்லர் 19, சஞ்சு சாம்சன் 42, படிக்கல் 21, பராக் 20, ஹெட்மெயர் 36, ஜுரல் 32 என அவரவர் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருந்தாலும், பஞ்சாப் கிங்ஸின் பந்து வீச்சில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 192 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில், தனது 2வது வெற்றியை ருசித்தது. நாதன் எல்லிஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுககப்பட்டார்.