IPL 2023 : இன்றைய போட்டி தோனிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டி! ஏன் தெரியுமா?
இன்று நடக்கவிருக்கும் CSK vs RR போட்டி, சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தோனி சென்னை அணிக்கு கேப்டனாக தலைமை வகித்து இன்று விளையாடும் 200வது போட்டி இதுவாகும்.
இன்று இரவு 7.30 மணிக்கு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 2வது இடத்திற்கு முன்னேறும்.
அதனால் இந்த போட்டியை எப்படியாவது ஜெயிக்க சிஎஸ்கே அணி போராடும். அதுமட்டுமல்லாமல், இன்றைய போட்டி மகேந்திரசிங் தோனிக்கும் முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.
சிஎஸ்கே கேப்டனாக தோனி தலைமையேற்று வழிநடத்தும் 200வது போட்டியாகவும் இது அமையவுள்ளது. அதனால் இப்போட்டியில் தோனியும் தனது அதிரடியை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

2011ல் சச்சினுக்கு இந்திய அணி உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்தது போல், இந்த ஐபிஎல் தொடர் கோப்பையை, தோனிக்கு வென்று கொடுத்து வழியனுப்பி வைக்க வீரர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
ஏனென்றால், தோனி கலந்துகொள்ளும் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தோனி தலைமையில், இதுவரை சிஎஸ்கே அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதோடு, 11 முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது.
தோனியின் 200வது கேப்டன்சி குறித்து ஜடேஜா கூறும்போது, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் இறங்கும் தோனிக்கு பிரம்மாண்ட வெற்றியை பரிசாக அளிப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.