IPL, WTC இறுதிப் போட்டி : கேஎல் ராகுல் விலகலா!? சிஎஸ்கே வீரரருக்கு வரப்போகும் அந்த வாய்ப்பு!
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி விளையாடிய நிலையில், கேப்டன் கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, ஐபிஎல் இந்த சீசனில் இருந்து மொத்தமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே1ம் தேதி பெங்களூர் அணியும், லக்னோ அணியும் மோதியது. இதில் பெங்களூர் அணி வீரர் பாஃப் டூ ப்ளஸிஸ் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, கேப்டன் கேஎல் ராகுல் திடீரென இடறி விழுந்ததில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரால் சரியாக நடக்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. சக போட்டியாளரின் உதவியோடுதான் களத்திலிருந்து வெளியேறினார். அடுத்து லக்னோ அணி தனது பேட்டிங்கை துவக்கியபோதும், வலியின் காரணமாக, கேஎல் ராகுல் கடைசியாகத்தான் களமிறங்கினார்.
அதைத்தொடர்ந்து, சென்னை அணியுடனான போட்டியில் கேஎல் ராகுல் பங்கேற்கவும் இல்லை. அவருக்கு ஏற்பட்ட இந்த காயத்தை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில், காயம் சற்று தீவிரமாக இருப்பதால், அவர் குணமடைந்து வர வெகுநாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதையடுத்து கேஎல் ராகுல், ஐபிஎல் தொடரின் மற்ற போட்டிகளில் இனி கலந்துகொள்ள மாட்டார் எனவும், ஜூன் 7ம் தேதி, லண்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இந்திய அணி வீரர் உனாத்கட் தோள்பட்டையில் காயமடைந்துள்ளார். இந்நிலையில், உனாத்கட், கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷாந்த் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.