இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 26. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில், 'பி' பிரிவில் 2 வது இடம் பிடித்தார். பின் நடந்த பைனலில் அதிகபட்சம் 63.70 மீ., தூரம் எறிந்து 6 வது இடம் பெற்றார்.
போட்டி இல்லாத நாளில் கடந்த மார்ச் 7 ல் இவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட 'ஸ்டானோஜோலல்' என்ற ஊக்க மருந்தினை பயன் படுத்தியது உறுதியானது.
இது குறித்து மார்ச் 29 ல் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஏப். 11 ல் ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட கமல் பிரீத் கவுர், 'பி' சாம்பிள் சோதனை வேண்டும் என கேட்கவில்லை.

பொதுவாக முதன் முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கும் வீரர்/வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படும். ஆனால் நோட்டிஸ் கிடைத்த 20 நாளுக்குள் கமல்பிரீத் கவுர், ஊக்கமருந்து விதிமீறலை ஒப்புக் கொண்டதால், தடை காலம் மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் அவர் 2023 ஆசிய விளையாட்டு மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.