கடைசி பந்தில் வெற்றி இலக்கைத் தொட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!

கடைசி பந்தில் வெற்றி இலக்கைத் தொட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. அந்த அணியின் சார்பாக சிவம் சிங் அதிகபட்சமாக 46 பந்துகளில் 76 ரன்களைக் குவித்தார். அதேபோல், நெல்லை ராயல் அணி சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு ஆட வந்தனர் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் கஜேந்திரன். ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ஆடியது அந்த அணி. அஜித்தேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடி, 44 பந்துகளில் 73 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல், ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். நிதிஷ் ராஜகோபால் மற்றும் அருண் கார்த்திக் தலா 26 ரன்களும், சுகேந்திரன் 22 ரன்களும் எடுத்தனர்.

இந்த ஆட்டத்தின் 19வது ஓவரில் மட்டும் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 33 ரன்களைக் குவித்து வியக்க வைத்தது. கடைசி ஓவரில் வெற்றி இலக்கைத் தொட நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சாளர் சுபோர்த் தனது சிறப்பான பந்து வீச்சால் ஆட்டத்தை கடைசி பந்து வரை எடுத்துச் சென்றார். ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி பெற இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், ரித்திக் ஈஸ்வரன் சிக்ஸர் அடித்து அந்த அணியை வெற்றி பெறச் செய்தார்.

20 ஓவர்களின் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com