‘ஐபிஎல் தேவையில்லை…’ கவுதம் கம்பீர்

‘ஐபிஎல் தேவையில்லை…’ கவுதம் கம்பீர்

லகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது. இதில், ‘இந்திய அணி வெற்றி பெறுமா?’ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ‘‘ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும். ஐபிஎல் தொடர் ஒவ்வொரு வருடமும் வரும். ஆனால், உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்’ என்று இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா இதுவரை 1983ஆம் ஆண்டு வென்றதற்கு பிறகு, 28 வருடங்கள் கழித்துதான் 2011ஆம் ஆண்டில் மீண்டும் கைப்பற்றியது. இந்த நிலையில் பன்னிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படவிருப்பது, இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கும் இந்த ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர், “இந்திய கிரிக்கெட்தான் நமக்கு முக்கியம்; ஐபிஎல் தொடர் அல்ல. இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்த 2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடர்தான் அதற்கு பெரிய வாய்ப்பு. அதற்காக இந்தியாவின் முக்கிய வீரர்கள் ஐபிஎல்லை விளையாடாவிட்டால் அதிலொன்றும் பெரிய தவறில்லை! ஏனென்றால், ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் நடக்கும். ஆனால் உலகக் கோப்பை நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஓய்வு எடுக்க விரும்பினால், அவர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால், கண்டிப்பாக ஒரு நாள் போட்டிகளில் ஓய்வெடுக்கக் கூடாது. கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் செய்த மிகப்பெரிய தவறு, ஆடும் 11 வீரர்கள் ஒரே அணியாக போதுமான கிரிக்கெட் போட்டிகளை விளையாடவில்லை என்பதுதான். இந்தியா இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சிறந்த முறையில் தயாராக வேண்டும். வீரர்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இல்லை. டி20 போட்டிகளில். அவர்கள் ஒன்றாக ஒரே 11 வீரர்கள் கொண்ட அணியாக போதுமான போட்டிகளில் விளையாடி தயாராக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com