"வெளியாள்" ரவிசாஸ்திரியின் கருத்தும், ரோஹித்தின் துடுக்கான பதிலும்!

"வெளியாள்" ரவிசாஸ்திரியின் கருத்தும், ரோஹித்தின் துடுக்கான பதிலும்!

இந்தூரில் ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவதற்கு இந்திய அணியினரின் அளவுக்கு அதிகமான நம்பிக்கைதான் காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ள கருத்து முட்டாள்தனமானது என்று பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் ரோஹித் சர்மா.

ரவி சாஸ்திரி 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 6 ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். அவரை ரோஹித் “வெளியாள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சூழலில் ரோஹித் அவ்வாறு கூறியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில் ரவி சாஸ்திரி இப்போது பயிற்சியாளராக இல்லை.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்னணையாளரான ரவி சாஸ்திரி, இந்திய அணியினரின் அதீத நம்பிக்கைதான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 18 மாதங்களாக எந்த ஒரு விஷயமானாலும் கருத்து கூறாமல், அமைதியாகவும் கண்ணியமாகவும் இருந்துவந்த ரோஹித் சர்மா, முன்னாள் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கு துடுக்காக பதிலடி கொடுத்துள்ளார்.

உண்மையில் சொல்லப்போனால், இரண்டு போட்டிகளில் வென்று இருந்தால், மூன்றாவது போட்டியையும் வெல்லத்தான் நினைப்பார்கள். இதை வெளியிலிருந்து ஒருவர் ”அளவுக்கு அதிகமான நம்பிக்கை” என்று சொல்வது அற்பத்தனமானது. ஏனெனில் நான்கு போட்டிகளிலும் சிறப்பாக ஆடத்தான் விரும்புவார்கள். இரண்டு போட்டிகளில் வென்றதால் யாரும் சும்மா இருக்கமாட்டார்கள். மீதமுள்ள இரண்டையும் வெல்லத்தான் நினைப்பார்கள். சிலர் சம்பந்தமே இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள். வெளியில் இருப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று விராட் கோலி குறிப்பிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அணிக்கு சமீபகாலம் வரை பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்த ஒருவர் மீது ரோஹித், துடுக்கான பதிலை கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எல்லா போட்டிகளிலும் எங்களால் முடிந்தவரை நன்றாக ஆடவே விரும்புகிறோம். ஆனால், அதை வெளியில் இருக்கும் சிலர், அதீத நம்பிக்கை என்கின்றனர். அவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரிக்கு எல்லாம் தெரியும். ஆனால், அவரே மனம்போன போக்கில் பேசக்கூடாது. ரவிசாஸ்திரியும் டிரஸ்ஸிங் ரூமில் எங்களுடன் இருந்தவர்தான். ஆடும்போது எங்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்றும் ரோஹித் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அணியினர் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், அவர்களின் வெற்றிக்கு இடமளித்துவிடக்கூடாது என்பதுதான் இங்குள்ள அணியினரின் எண்ணமாக இருக்கும். அதே மனநிலையில்தான் நாங்களும் விளையாடி வருகிறோம் என்றும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com