peter may
peter may

டெஸ்ட் கிரிக்கெட்டில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய Peter May, Neil Harvey!

கிரிக்கெட் துணுக்குகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென்று தனி பாணியில், நேர்த்தியாகவும், அசத்தலாகவும் பேட்டிங் செய்த இரண்டு பேட்ஸ்மேன்களைப் பற்றி காண்போம். 

பீட்டர் மே (Peter May) (வலது கை பேட்ஸ்மன்) 

நீல் ஹார்வி (Neil Harvey) (இடது கை பேட்ஸ்மன்)

பீட்டர் மே (Peter May)

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக திகழ்ந்த பீட்டர் மே, சுமார் பத்து ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு விளையாடியவர். 

பள்ளியில் பயிலும் பொழுதே இவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த, திறமைசாலியான கிரிக்கெட் வீரராக திகழ்வார் என்பதற்கான சாத்திய கூறுகளை வெளிப்படுத்தினார். இளம்  வயதிலேயே ஆடுவதற்கான நுணுக்கங்களை திறம்பட கற்று தேர்ந்தார். 

சர்ரே (Surrey) கிரிக்கெட் டீமிற்காக ஆடிய இவர், 1952லிருந்து 1958 வரை அந்த குழு சாம்பியன் குழுவாக திகழ உதவினார். தனது ஆட்ட திறமையால் சிறந்த பேட்ஸ்மேனாகவும், திறமை மிக்க கேப்டனாகவும்  இங்கிலாந்து டெஸ்ட் அணிகளை வழி நடத்தினார். 

ஒரு டெஸ்ட் மேட்சில் மேற்கிந்திய தீவு அணியின் கைகள் ஓங்கி இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில், அப்போது இங்கிலாந்து கேப்டனாக இருந்த பீட்டர் மே, காலின் கவுட்ரேயுடன் ஜோடி சேர்ந்து அந்த மேட்ச் டிராவில் முடிய வழி வகுத்தார். இருவரும் ஜோடி சேர்ந்து 411 ரன்கள் குவித்தனர். காலின் கவுட்ரே 154 ரன்களும், பீட்டர் மே 285 ரன்கள் (நாட் அவுட்) குவித்தனர்.

66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பீட்டர் மே, 41 டெஸ்ட்டுகளில் கேப்டனாக பதவி வகித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 27592 ரன்களுக்கு மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4537 ரன்களும், (46.77 சராசரி ரன்கள்) எடுத்துள்ளார். 

அன்றே டெஸ்டில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக ரிக்கார்டு ஏற்படுத்திய புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் (Jim Laker) பீட்டர் மே, இருவரும் சர்ரே மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு சேர்ந்தாற்போல பல மேட்சுகளில் கிரிக்கெட் விளையாடினர். இருந்தும் சில தனிப்பட்ட காரணங்களால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை கிட்டதட்ட கடைசி வரையிலும் தவிர்த்து வந்தனர். 

தனது 32 வது வயதில் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓய்வை அறிவித்த பீட்டர் மே, பின்னர் காப்பீடு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரியத் தொடங்கினார். 

தனது 65 வயதில் இயற்கை எய்திய பீட்டர் மே, சந்தர்ப்பம் இருந்தும் கடைசி வரையில் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரராக மாறாமல் அமெய்சூர் கிரிக்கெட் வீரராகவே திகழ்ந்தார்.

நீல் ஹார்வி (Neil Harvey)

neil harvey
neil harvey

ஸ்டைலாக ஆடக்கூடிய இடது கை பேட்ஸ்மன் நீல் ஹார்வி. ஆஸ்திரேலிய குழுவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய சிறந்த வீரர். 

டான் பிராட்மேனின் தலைமையில் 1948 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட குழுவில் இடம் பெற்றவரான நீல் ஹார்வி, வலது கையில் சுழல் பந்து வீசுவார்.

அதிகபட்சமாக 205 ரன்களையும், 21 சதங்கள், மொத்தம் 6149 ரன்களும் குவித்துள்ளதோடு (சராசரி 48.41 ரன்கள்) மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எதிர்பாராத விதமாக ஒரே ஒரு டெஸ்டில் கேப்டனாக செயல் பட்டார். அதை தவிர்த்து, 1957 முதல் 1963ம் வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரிடையர் ஆகும் வரையில் துணை கேப்டனனாகவே திகழ்ந்தார். பல டெஸ்டுகளில் சிறப்பாக ஆடியும், அனுபவம் மிக்கவரான இவருக்கு அதிக டெஸ்ட மேட்சுகளில் கேப்டனாக வழி நடத்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

இந்திய அணிக்கு எதிராக 1948ம் ஆண்டு 153 ரன்கள் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த நீல் ஹார்வி, 1963ம் ஆண்டு, தனது 78வது டெஸ்ட் மேட்சில் (மொத்தம் விளையாடியது 79 டெஸ்டுகள்) இங்கிலாந்திற்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் கடைசியாக சதம் அடித்து (154 ரன்கள்), மொத்தம் 21வது சதங்கள் எடுத்துள்ளார்.

இவர் இதுவரை இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 205 ரன்கள், மெல்போர்ன் மைதானத்தில் 1953ல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும், இன்னொரு இரட்டை சதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக சபீனா பார்க் மைதானத்தில் 1955ம் ஆண்டு 204 ரன்களும் அடித்துள்ளார்.

இவர் வீழ்த்திய மூன்று டெஸ்ட் விக்கெட்டுகளில் இரண்டு, இந்திய அணிக்கு எதிரானவை. இந்திய அணி கேப்டன் ராம்சந்த் மற்றும் ஏ.ஜி. மில்கா சிங். 

இவரது ட்ரைவ்கள், நேர்த்தியாகவும், ஸ்டைலாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இவரது ஆட்டத்தை காணவே பல ரசிகர்கள் கூடுவார்கள். சிறு வயதில் ஆர்வத்தோடும், அர்பணிப்போடும் கிரிக்கெட் ஆட்டத்தை கற்றுக் கொண்டார். இவரது சகோதரர்களும் உயர்தர கிரிக்கெட் ஆடியுள்ளார்கள்.

1961ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில், கேப்டன் ரிச்சி பெனாவுட் (Benaud) காயம் காரணமாக விலகிக்கொள்ள, நீல் ஹார்விக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை டெஸ்ட் மேட்சில் கேப்டனாக வழிநடத்த சந்தர்ப்பம் கிடைத்து. தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அணியை தனது சாதுரியமான நகர்வுகளால் வெற்றி பெற வைத்தார். 

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இவர், பாகிஸ்தான் அணி தவிர்த்து மற்ற எல்லா அணிகளுக்கு எதிராக சதங்கள் குவித்து சாதித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com