மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா!

மழையால் கடைசிநாள் ஆட்டம் நின்றது
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 
 கைப்பற்றிய இந்தியா!

போர்ட் ஆப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசிநாளான திங்கள்கிழமை மழையால் ஆட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து இரண்டு டெஸ்ட் கொண்ட இந்த போட்டித் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

நான்காம் ஆட்டத்தின் இறுதியில் 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 365 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இருந்தது. இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகளை அணியை குறைந்த ரன்களில் சுருட்டி வெற்றியை கைப்பற்றலாம் என்று நினைத்திருந்தது. ஆனால், மழையால் ஐந்தாம் நாள் ஆட்டம் நின்றது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஆட்டம் தொடங்க வேண்டும். ஆனால், கருமேகங்கள் சூழ்ந்ததால் முதல் நான்கு மணி நேரம் ஆட்டம் நடைபெறவில்லை. பின்னர் பகல் 1.15 மணிக்கு ஆட்டத்தை தொடங்கலாம் என நினைத்திருந்தபோது திடிரென மழை பெய்தது.

பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டத்தை தொடங்குவதற்காக மேற்கிந்திய அணியின் சந்தர்பால், ஜெர்மைன் பிளாக்வுட் இருவரும் பேடுகளை கட்டிக் கொண்டு தயாரானார்கள். மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. மழையால் ஐந்தாம் நாள் ஆட்டத்தை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கணிசமான ஸ்கோரை எடுத்திருந்த்து. இந்திய அணி முன்னிலை பெற்றிருந்ததால் இரண்டாவது டெஸ்ட் ஒரு முடிவு நிச்சயம் எட்டப்பட்டுவிடும். இந்தியா டெஸ்டை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், கடைசி நாள் ஆட்டம் மழையால் நின்றதால் எங்கள் கனவு தகர்நதுவிட்டது என்றார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

இரண்டாவது டெஸ்டில் நாங்கள் கடுமையாக போராடினோம். எங்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முன்னேற்றம் இருந்தது. கடைசிநாள் ஆட்டத்தில் போராடி வெற்றிபெறலாம் என நினைத்திருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை கெடுத்துவிட்டது என்றார் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பிராத்வைட்.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 438.

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 255.

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 181 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழப்புடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள இரண்டாவது இன்னிங்ஸ்: 76 ரன்களுக்கு 2 விக்கெட். சந்தர்பால் 24 ரன்களுடனும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மழையால் கடைசிநாள் ஆட்டம் நின்றுபோனதால் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com