சென்னை அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி, 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் 16வது சீசன் தொடரின் நேற்றைய போட்டியில், சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் சிறப்பான துவக்கத்தக் கொடுத்தனர். இதையடுத்து, ஜெய்ஸ்வால் 77 ரன்கள், ஜாஸ் பட்லர் 27 ரன்கள், சாம்சன் 17 ரன்கள், ஜூரேல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் என தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்ய, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய, சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களும், ஷிவம் துபே 52 ரன்களும், மொயின் அலி 23 ரன்களும், ஜடேஜா 23 ரன்களும் எடுத்தனர். மற்றபடி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஷிவம் துபே 4 சிக்ஸர்களை விளாசினார்.
கெய்க்வாட், துபே இருவரின் ஆட்டமும் ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருந்தும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இப்போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, சென்னை அணி மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.