கிராவ்லே அதிரடி! 189 ரன்கள் குவிப்பு: முன்னிலையில் இங்கிலாந்து அணி!

 ஜாக் கிராவ்லே
ஜாக் கிராவ்லே

ஓல்டு டிராஃப்போர்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 317 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து கூடுதலாக 67 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லே அதிரடியாக ஆடி 189 ரன்கள் குவித்தது இரண்டாம் நாள் ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும். கிராவ்லே, ஜோ ரூட் (84) ஜோடி 29 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தனர். பின்னர் கிராவ்லே, மொயின் அலியுடன் (54) கூட்டு சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர்.ஆட்ட முடிவில் ஹாரி புரூக் 14 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் 1 ரன் எடுத்திருந்தபோது ஸ்டார்க் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு கேரியிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது 25 ஓவர்களில் 178 ரன்களை குவித்தது.

ஆஷஸ் போட்டிகளில் 100 ரன்களுக்கு மேலாக குவித்த இங்கிலாந்து வீர்ர்களில் கிராவ்லே 6 இடத்தை பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பாட் கம்மின்ஸ் பந்துகளை தொடர்ந்து விளாசி ஆடிய கிராவ்லே 189 ரன்கள் எடுத்திருந்த போது கிரீன் வீசிய பந்தில் அவுட்டானார். அவர் எடுத்த 189 ரன்களில் 21 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

336 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அணியின் ஸ்கோர் 351-ஐ எட்டியபோது நான்காவது விக்கெட் வீழ்ந்தது. ஜோ ரூட் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹாஸில்வுட் பந்துவீச்சில் அவுட்டானார்.முன்னதாக தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த  ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிறிஸ் வோக்ஸ் 62 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சுருக்கமான ஸ்கோர்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 317.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள். ஜாக் கிராவ்லே 189, மொயீன் அலி 54, ஜோ ரூட் 84. ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹாஸில்வுட், கிரீன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com