ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை! அடித்து நொறுக்கிய சுப்மன் கில்!
நேற்று நடந்த இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியடைந்த நிலையில், சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளதோடு, மேலும் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் நேற்று, முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அடித்து ஆடும் முனைப்பில் இருந்தாலும், ரோகித் சர்மா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, இஷன் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானாலும், சுப்மன் கில் தனி ஒருவராக நின்று விளையாடி, 149 பந்துகளில் 208 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் 19 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும். இந்நிலையில் இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களத்தில் இறங்கியது. நியூசிலாந்து அணியிலும் துவக்கஆட்டக்காரர் ஃபின் ஆலன் 40 ரன்கள் எடுத்து அவுட்டாக, அதன்பின்னர் வந்த கான்வே, நிக்கல்ஸ், மிட்ச்சல் என வரிசையாக அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 28.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. நியூசிலாந்து அணி 250 ரன்களுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைக்கேல் பிரேஸ்வெல் அதை தகர்த்தெறிந்து 78 பந்துகளில் 12 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் உட்ப 140 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இருந்தும் நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில், இந்தியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்தை வென்றுள்ளது.
இப்போட்டியில் சுப்மன் கில் அருமையாக விளையாடியதோடு, பல சாதனைகளை இப்போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அதாவது, இதற்கு முன்னதாக, இஷான் கிஷான் தனது 24ம் வயதில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். அதை இப்போது சுப்மன் கில் தனது 23வது வயதில் இரட்டை சதம் அடித்து முறியடித்துள்ளார்.
அதேபோல், சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் அதிக ஸ்கோர் (186 ரன்கள்) அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்துவந்தார். தற்போது இதே ஐதராபாத் மைதானத்தில் சுப்மன் கில் 208 ரன்களை அடித்து சச்சின் சாதனையை முடியடித்துள்ளார்.
அடுத்ததாக, சர்வதேச அளவில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் பட்டியலிலும் சுப்மன் கில் இடம்பிடித்துள்ளார். இதில் 18 இன்னிங்ஸ்களில் விளையாடி 1000 ரன்களை அடித்து பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் முதலிடத்தில் இருக்கும் நிலையில், சுப்மன் கில் 19 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த 1000 ரன்களைக் கடந்து, 2வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.