ரிங்கு சிங், நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி முன்னேற்றம்!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ரிங்கு சிங், நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசன் 61வது போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. டாஸை வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் களமிறங்கினர். முதலில் நிதானமாக ஆட்டத்தை துவக்கிய நிலையில், பின்னர் சற்று அதிரடியை வெளிப்படுத்தி ஆட முற்பட்டனர்.
இந்நிலையில், 3.3வது ஓவரில் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஹானே, கான்வேயுடன் சேர்ந்து சிறப்பாக ஆட நினைத்த நிலையில், 7.6வது ஓவரில் 11 பந்துகளில் 16 ரன்களை எடுத்து அவரும் அவுட்டானார்.
அடுத்து நிதானமாக ஆடிவந்த கான்வே 30 ரன்கள் எடுத்த நிலையிலும், அம்பதி ராயுடு 4 ரன்னிலும், மொயின் அலி 1 ரன்னிலும், ஜடேஜா 20 ரன்னிலும் அவுட்டாக, ஷிவம் துபே மட்டும் 34 பந்துகளில் 3 சிக்ஸர் உட்பட 48 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை சற்று வலுப்படுத்தினார்.
இதையடுத்து சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் ஜேசன் ராய், குர்பாஸ் களமிறங்கினர். அந்த அணியில் துவக்க வீரர்களின் ஆட்டம் சற்று சறுக்கலாக அமைந்தது. இதையடுத்து 4.3வது ஓவரிலேயே 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தவித்தது.
இதையடுத்து நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் சென்னை அணி பவுலர்களை திணறடித்தனர்.
அதிரடியாக விளையாடிவந்த ரிங்கு சிங் 43 பந்துகளில் 3 சிக்ஸர் உட்ப 54 ரன்களை எடுத்து ரன் அவுட்டானார். நிதிஷ் ராணா 44 பந்துகளில் 1 சிக்ஸர் உட்பட 57 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து சென்னை அணியை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.