நான்காம் நிலை ஆட்டக்காரர் யார் என்பது பிரச்னையாகவே உள்ளது: கேப்டன் ரோகித் சர்மா!

நான்காம் நிலை ஆட்டக்காரர் யார் என்பது பிரச்னையாகவே உள்ளது: கேப்டன் ரோகித் சர்மா!

யுவராஜ் சிங் ஓய்வுபெற்றதிலிருந்து, ஒருநாள் போட்டியில் நான்காம் நிலை ஆட்டக்காரர்களாக இந்திய கிரிக்கெட் அணியில் எவரும் நிலைத்திருக்கவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். உலக கோப்பை போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு  இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் நான்காம் நிலை ஆட்டக்காரர் யார் என்பதில் இன்னமும் போராட்டம் நீடிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நடந்த போட்டியின் போதும் இதே பிரச்னை நீடித்தது.

யுவராஜ் சிங் ஓய்வுபெற்ற பிறகு நான்காம் நிலை ஆட்டக்காரர்களாக யாரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. நீண்டகாலம் இந்த பிரச்னை நிலவி வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் நான்காவது நிலை ஆட்டக்காரராக களம் இறங்கி வந்தார். அவர் இப்போது நன்றாகவே விளையாடி வருகிறார் என்றும் ரோகித் குறிப்பிட்டார்.

ஸ்ரேயாஸ் இப்போது காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். நான்காம் நிலை ஆட்டக்காரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக புதியவர்கள்தான் களத்தில் இறக்கப்பட்டு வருகிறார்கள். நன்றாக விளையாடும் ஆட்டக்கார்ர்கள் பலர் காயமடைந்துள்ளதால் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளது. வழக்கமாக நான்காம் நிலையில் ஆடும் ஒரு வீர்ர் காயமடைந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரைத்தான் நாம் களம் இறக்க வேண்டியுள்ளது.

நான்காம் நிலை ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் காயமடைந்துள்ளதால் அவர் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு விளையாட முடியாது. இதேபோல 5 ஆம் நிலை ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் காயம் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு ஆட வரமாட்டார். அவர்கள் இருவரும் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டதால் இன்னும் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது.

மேலும் காயமடைந்து அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர்கள் ஓய்வெடுத்து மீண்டும் அணிக்குத் திரும்பினாலும் எப்படி விளையாடுவார்கள் என்பதை சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் அணிவீர்ர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது பற்றி என்ன செய்யலாம் என்பதை விவாதித்துதான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், உண்மை நிலைவரம் என்னவெனில் அடுத்து இவரை நான்காவது நிலையில் களத்தில் இறக்கலாம் என்று சொல்லுவதற்கு ஒருவரும் இல்லை. முதலிடம் ஆனாலும், கடைசி இடம் ஆனால் போராடித்தான் பெறவேண்டியுள்ளது என்றார் ரோகித்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com