ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்டில் சாதனையுடன் சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்–கவாஸ்கர் டிராபியின் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நிலையில், 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நேற்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி. விளையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 36 ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்து வெளியேற்றியதன் மூலம், அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450வது விக்கெட்டை எடுத்தார். அதோடு, 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதன்பின் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான டாட் மர்பியின் அபார பந்துவீச்சினால், கேஎல் ராகுல் (20), ரவிச்சந்திரன் அஸ்வின் (23), சட்டேஸ்வர் புஜாரா (7), விராட் கோலி (12) ரன்களுக்கும் அவுட்டாகினர்.
இருந்தும் ரோஹித் சர்மா சற்று நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி வரும் நிலையில், நேற்றே ஒரு சத்தமில்லாத சாதனையையும் நிகழ்த்தினார்.
அதாவது, சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மன் 98.2 சராசரி உடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மா 74.7 என்ற சராசரி உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இன்றைய 2ம் நாள் ஆட்டத்தில் தற்போது ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லியன் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரவீந்தர ஜடேஜா ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடி வரும் நிலையில், ரோஹித் சர்மா, 172 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 101 ரன்களை எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகிறார்.
தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில், மேலும் 250 ரன்களாவது இந்த இன்னிங்சில் எடுக்கும்பட்சத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.