கண்ணீரோடு விடைபெற்ற சானியா மிர்சா!

கண்ணீரோடு விடைபெற்ற சானியா மிர்சா!

லகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை எனப் பெயர் பெற்றவர் சானியா மிர்சா. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர். மகளிர் இரட்டையர் பிரிவில் மூன்று முறை, கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்று முறை என ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார். முப்பத்தாறு வயதாகும் சானியா மிர்சா சமீபத்தில், ‘தாம் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விரைவில் ஒய்வு பெறப்போவதாக’ அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ள ‘WTA 1000 டென்னிஸ் சாம்பியன்ஷிப்’ தொடருடன் தமது டென்னிஸில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் சானியா மிர்சா பங்கேற்றுள்ளார். அவர் பங்கேற்கும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியாவும் ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடினர்.

இந்த இணை அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்தி இணையை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சானியா மிர்சா-போபண்ணா இணை பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டு ஆடியது. சானியாவுக்கு கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவென்பதால் வெற்றியுடன் விடைபெறும் கனவில் இந்த இணை விளையாடியது. ஆனால், எதிர்முனையில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய லூயிசா ஸ்டெபானி - ரபேல் மாடோஸ் இணை 6-7 (2), 2-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கலப்பு இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதனால் சானியாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி வெற்றிக் கனவு தகர்ந்தது. போட்டிக்குப் பின் சானியா, மிகவும் உணர்ச்சிப் பெருக்குடன் நா தழுதழுக்க செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் சானியா மிர்சா. மைதானத்தில் குழுமியிந்த ரசிகர்கள் பெருத்த கர கோஷம் எழுப்பி அவருக்கு விடை கொடுத்தனர். அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com